Published : 08 Dec 2023 12:40 PM
Last Updated : 08 Dec 2023 12:40 PM

ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் புதிய முதல்வர்கள் தேர்வு: மத்திய பார்வையாளர்களை அறிவித்தது பாஜக

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான புதிய முதல்வர்களைத் தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்கள் குழுக்களை பாஜக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

இதன்படி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தவாடே மற்றும் சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்துக்கான பார்வையாளர்களாகவும், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார், கே. லக்ஷ்மன் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோர் மத்தியப் பிரதேசத்துக்கான பார்வையாளர்களாகவும், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனோவால் மற்றும் துஷ்யந்த கவுதம் ஆகியோர் சத்தீஸ்கர் மாநிலப் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு்ள்ளனர்.

முன்னதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வியாழக்கிழமை கூறுகையில், "பார்வையாளர்கள் அவர்களுக்கான மாநிலங்களுக்கு பயணம் செய்து மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் கூட்டங்களை மேற்பார்வையிடுவார்கள். யார் புதிய முதல்வர் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மூன்று மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி, சமூக, பிராந்திய, நிர்வாக மற்றும் நிறுவன நலன்களைக் கவனத்தில் கொள்கிறது" என்று தெரிவித்தார்.

இதனிடையே, மூன்று மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். என்றாலும் இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்தும் விதமாக இது வழக்கமான சந்திப்புதான் எனத் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 3 மாநிலங்களிலும் யார் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், 3 மாநிலங்களின் சட்டப்பேரவை கட்சி கூட்டங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x