Published : 16 Nov 2023 05:05 PM
Last Updated : 16 Nov 2023 05:05 PM

“மதவாதமும், வாக்காளர்களைப் பிரித்தாள்வதும் பாஜக மரபணுவிலேயே இருக்கிறது” - கே.சி.வேணுகோபால் நேர்காணல்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் | படம்: ஆர்.வி.மூர்த்தி

ஜெய்ப்பூர்: மதவாதமும், வாக்காளர்களைப் பிரித்தாள்வதும் பாஜகவின் மரபணுவிலேயே இருக்கிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான கே,சி.வேணுகோபால். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் வார் ரூமில் இருந்தபடி அவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்.அந்தப் பேட்டியில் இருந்து..

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாஜக காங்கிரஸ் சமரச அரசியல் செய்வதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் விமர்சித்து வருகிறது. வாக்காளர்களைப் பிரிக்கும் பாஜகவின் இந்த உத்தியில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் மேற்கொண்டுள்ள வியூகம் என்ன? - பாஜகவுக்கு தேசிய, மாநில அளவில் அது மேற்கொண்ட நல்லாட்சி நிர்வாகம் பற்றி பெருமையாக எடுத்துரைக்க ஏதும் இல்லை. காரணம், மக்களின் உண்மையான பிரச்சினைகளான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வேளாண் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜக எதுவுமே செய்யவில்லை. மக்களின் துயரங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இப்பிரச்சினைகள் உருவாகின. மதவாதமும், வாக்காளர்களைப் பிரித்தாள்வதும் பாஜகவின் டிஎன்ஏவிலேயே இருக்கின்றது. அதனால், அவர்கள் அதனைத் தங்களது தவறான பிரச்சாரங்கள் மூலம் முன்னெடுக்கின்றனர்.”

பாஜகவை விமர்சிக்க இந்த ஒரு காரணம் மட்டும்தான் காங்கிரஸிடம் உள்ளதா? - மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியன காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதன் தலைவர்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பாஜகவின் நட்சத்திர பிரச்சாகராக மாறியுள்ளது அமலாக்கத் துறை. அவர்களால் இதுவரை ஒரேயொரு பாஜககாரர் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அரசாங்க அமைப்புகளை இவ்வாறாக தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.”

அரசியல் தலைவர்கள் பாரம்பரியத்தையும், நெறிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் பாஜகவின் உத்தி எடுபடுமா? - பாஜகவின் உத்தி இங்கே நிச்சயமாக எடுபடாது. ஏனெனில், அவர்கள் உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பவே எப்போதும் முயல்கின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் களம் காண்பதில்லை. காங்கிரஸுக்கு தேர்தல் என்பது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவி. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடைபெறும் ஆட்சிமுறையை வைத்தே நீங்கள் இந்த வித்தியாசத்தை உணரலாம். அண்மையில் நாங்கள் வெற்றி பெற்ற கர்நாடகாவில் எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். காலவரையறையின்றி மக்கள் மத்தியில் மதவாதத்தைப் புகட்ட முடியாது. மக்களின் உண்மையான பசியாற்ற அவர்களுக்கு அரிசியைத் தான் கொடுக்க வேண்டும்.”

பாஜக முதல்வர் வேட்பாளர் அடையாளமாக தாமரையை முன்னிறுத்துவதாக விமர்சிக்கிறீர்கள். ஆனால் காங்கிரஸே இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லையே? - இது காங்கிரஸுக்குப் புதிதல்ல. வழக்கமாகவே காங்கிரஸ் பல நேரங்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முன்னிறுத்தாமலேயே வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி கட்சித் தலைமைக்கு முதல்வர் நியமனம் தொடர்பாக பரிந்துரை செய்வார்கள். நாங்கள் இத்தேர்தலை ராஜஸ்தான் அரசு மேற்கொண்ட நுட்பமான நலத்திட்டங்கள், முன்வைத்துள்ள வாக்குறுதிகளை வைத்து எதிர்கொள்கிறோம். ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நீண்ட நாட்கள் அவர் இங்கே செலவிட்டார். அது தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் கண்கூடாகத் தெரிகிறது.”

அப்படியென்றால் ராஜஸ்தானில் ராகுல் காந்தி ஏன் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை? - “ராகுல் காந்தி ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்யவில்லை என்ற பிம்பம் சில ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக அவர் ராஜஸ்தானின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் அவரைப் போன்ற மூத்த தலைவர்களுக்கான பிரச்சாரப் பயணத் தேதிகளை வகுத்து வருகிறது. ராஜஸ்தானில் நவம்பர் 25ல் தான் தேர்தல் என்பதால் அதனை ஒட்டி அவருக்கு நிறைய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நவ.16 தொடங்கி குறைந்தது 4 நாட்களாவது ராகுல் ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வார்.”

அசோக் கெலாட் - சச்சின் பைலட் முகாம்களுக்கு இடையேயான பூசல்கள் களையப்பட்டுவிட்டனவா? இது கட்சிக்கு தலைவலியா? - சென்ற திங்கள்கிழமையன்று ராஜஸ்தானின் மூத்த தலைவர்கள் அனைவரும் கூடி ஆய்வுக்கூட்டம் நடத்தினோம். சச்சின் பைலட் அப்போது மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை பரபரப்பாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இருப்பினும் ஒரு நேரம் ஒதுக்கி அங்கிருந்து வந்து அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அடுத்த நாள் காலையிலேயே போபால் புறப்பட்டுச் சென்றார். அவருடைய நடவடிக்கையில் எந்த உட்கட்சிப் பூசலும் தெரியவில்லை. கட்சியின் நலனே முக்கியம் என்று வரும்போது காங்கிரஸ்காரர்கள் யாராயினும் அதில் தான் கவனம் செலுத்துவார்கள். அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் காங்கிரஸுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அதனால், மிகவும் சவுகரியமான பெரும்பான்மையுடன் மீண்டும் நாங்கள் ராஜஸ்தானில் ஆட்சியமைக்கப் போகிறோம்.”

தேர்தல் போட்டாப் போட்டியில் போர்க்கொடி தூக்கிய அதிருப்தியாளர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமா? - “பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அதிருப்தி இருந்தாலும் அவர்களின் மனநிலை காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், பாஜக தோற்க வேண்டும் என்பதாகவே உள்ளது. சிலர் உண்மையிலேயே சீட் பெறத் தகுதியாக இருந்தும் கிடைக்காமல் போனதால் அதிருப்தியில் இருக்கலாம். அவர்களுக்கு அடுத்த முறை நிச்சயமாக நல் வாய்ப்பு கிட்டும். அதையும் தாண்டி சுயேச்சையாகப் போட்டியிடும் பிடிவாதத்தில் இருக்கும் சிலர் மீது கட்சி கூடி இறுதி முடிவு எடுக்கும்.”

ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி: முகமது இக்பால் | தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x