Published : 16 Nov 2023 03:29 PM
Last Updated : 16 Nov 2023 03:29 PM

“கேசிஆர் போல தோற்கடிக்க முடியாதவர் கோலி” - கவிதாவின் பாராட்டும், காங்கிரஸின் ரியாக்‌ஷனும்

தெலங்கானா முதல்வர் மகள் கவிதா | கோப்புப்படம்

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, தெலங்கானா முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கேசிஆருடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்எல்சியும், முதல்வரின் மகளுமான கவிதா. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள கவிதா, "முதல்வர் கேசிஆரை போல விராட் கோலியும் தோற்கடிக்க முடியாதவர். மாஸ்டர்கள் களத்தில் நிற்கும் போதெல்லாம் அங்கு மாயாஜாலம் நிகழ்கிறது" என்று தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் புதன்கிழமை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது 50-ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தினை எட்டியிருந்தார். மேலும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்திருந்தார். இந்தப் பின்னணியில் கோலிக்கான தனது பாராட்டைக் கவிதா தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ள தெலங்கானா காங்கிரஸ் கட்சி, கவிதாவை விமர்சித்துள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "நாட்டுக்காக விளையாடுவதற்கும், கமிஷனுக்காக செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது" என்று கூறியுள்ளது. மற்றொரு பதிவொன்றில், "கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு போட்டியில்லை. காலேஸ்வரம் ஊழலில் கேசிஆரை மிஞ்ச ஒருவரும் இல்லை" என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த மாதம் இறுதியில் தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், கேசிஆரின் பிஆர்எஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. என்றாலும் ஆட்சியைத் தக்கவைக்க கேசிஆரும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸுக்கும் தீவிரம் காட்டி வருகின்றன. தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவ.30-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x