Published : 15 Nov 2023 06:13 AM
Last Updated : 15 Nov 2023 06:13 AM

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவர்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவர் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி அளித்துள்ளார். அவர்களைக் காப்பாற்ற 3-வது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்றது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக நேற்று மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை மற்றொரு குழாய் வழியாக விநியோகிக்கப்படுகிறது. வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் அவ்வப்போது பேசி வருகின்றனர்.

தற்போது சுரங்கப் பாதையை மூடியுள்ள மணல் குவியலில் பக்கவாட்டில் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி எர்த் ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு ராட்சத இரும்பு குழாய்கள் சொருகப்பட்டு வருகின்றன. இந்த இரும்பு குழாய் இணைப்பு வழியாக 40 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் நேற்று ஒரு காகிதத்தில் தங்கள் சூழ்நிலையை எழுதி குழாய் வழியாக மீட்புப் படை அதிகாரிகளுக்கு அனுப்பினர். அதில், “ஆக்சிஜன் போதுமான அளவு இருக்கிறது. போதிய வெளிச்சம் இருக்கிறது. வாக்கி டாக்கியை இயக்க தேவையான பேட்டரிகள் உள்ளன. குடிநீர் போதுமான அளவில் உள்ளது. குழாய் வழியாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் தொழிலாளர்களின் பசிக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் உணவுப் பொருட்களை குழாய் வழியாக அனுப்ப வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, “மீட்புப் பணிகளை நானே நேரில் மேற்பார்வையிட்டு வருகிறேன். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களோடு பேசி ஆறுதல் கூறினேன். தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்சிஜன் குழாய் வழியாக விநியோகம் செய்யப்படுகிறது. 40 தொழிலாளர்களும் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தொடர்பு கொண்டு தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரித்து வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய 6 பேர் அடங்கிய சிறப்பு குழுவை உத்தராகண்ட் அரசு நியமித்துள்ளது. அக்குழு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x