Published : 10 Nov 2023 01:32 PM
Last Updated : 10 Nov 2023 01:32 PM

இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறையில் உறவை வலுப்படுத்தும் நோக்கில் 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில், இந்திய தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க தரப்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது, முக்கிய கனிமங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் தற்போது நிலவும் சர்வதேச சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. மேலும், உயர்-தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இதில், ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் ஏற்படுத்தி உள்ள கூட்டாண்மையை வலுப்படுத்துவது, பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும். முக்கியமான தொழில்நுட்பங்கள், சிவில் விண்வெளியில் ஒத்துழைப்பு மற்றும் முக்கியமான கனிமங்கள் போன்ற புதிய களங்களில் ஒத்துழைப்பை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "குவாட் மூலம் யு.எஸ்-இந்தியா கூட்டாண்மையை வலுப்படுத்துவது உட்பட சுதந்திரமான மற்றும் திறந்த, வளமான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்ச்சியான இந்தோ-பசிபிக் பகுதியை இரு தரப்பும் ஊக்குவிக்கின்றன. சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கை மேம்படுத்துதல், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்துவதாக" அவர் கூறினார்.

இந்தியா-யு.எஸ். இருதரப்பு உறவு, ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதைக் காட்டுவதாவும், பாதுகாப்பு ஒத்துழைப்பு நமது இருதரப்பு உறவின் மிக முக்கியமான தூண்களில் ஒன்று என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், திறன் மேம்பாட்டிற்கான களங்களில் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதை இந்தியா எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஆஸ்டின் தனது தொடக்க உரையில், உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதோடு, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், பொதுவான இலக்குகளைக் கண்டறிந்து மக்களுக்கு வழங்குவதும் முன்னெப்போதையும் விட தற்போது முக்கியமானது என கூறினார். மேலும், அவர், இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டாண்மையின் எதிர்காலம், பாதுகாப்பான உலகத்தை நோக்கிய நமது பொதுவான முயற்சிகள் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது என்றும் ஆஸ்டின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x