

புதுடெல்லி: மத்திய கிழக்கை இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் வகையில் மிகப் பெரிய ரயில் மற்றும் துறைமுகத் திட்டத்தில் அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகள் புதிய ஒப்பந்தத்தில் ஜி-20 மாநாட்டில் கையெழுத்திடும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பைனர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவுக்கு வணிகத் தொடர்பை ஏற்படுத்த கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து (திட்டம்) குறித்த சாத்தியக்கூறை ஆராய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய யூனியனும் இந்தத் திட்டத்தின் முக்கிய பங்கேற்பாளர்களாக இருக்கும்.
இந்தத் திட்டம் பல மாதங்களாக கவனமாக மேற்கொள்ளப்பட்ட அரசாங்க நடைமுறை, அமைதியான, இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாகும். மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ள இந்தத்திட்டம் நிறைவேற எத்தனை காலம் எடுக்கும் என்பது எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரின் நிலைப்பாட்டில் ஜி20 தலைவர்கள் பிளவுபட்டுள்ள நிலையில், கரியமில வாயு வெளிப்பாட்டை குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தலைவர்கள் கண்டுபிடிக்காத நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் இந்தத் திட்டம் முக்கியமான விவாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.