Published : 07 Nov 2023 09:01 AM
Last Updated : 07 Nov 2023 09:01 AM

சத்தீஸ்கரில் காங் vs பாஜக; மிசோரத்தில் பலமுனைப் போட்டி: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

மிசோரம் மாநிலத்தின் முதன்முறை வாக்காளர்கள்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர், மிசோரமில் இன்று (நவ.7) காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். மிசோரத்தில் முதல்வர் வாக்களிக்கவந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க இயலாமல் அவர் திரும்பிச் சென்றார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.57 லட்சம் பேர் வாக்குரிமைபெற்றுள்ளனர். அவர்களுக்காக 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுஉள்ளன. மாநில போலீஸார் மற்றும்மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கர் முதல் கட்டத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்கை செலுத்தி இத்திருவிழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கிறேன். முதன்முறையாக வாக்களிக்கும் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங் vs பாஜக: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடி மோதல் நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் பிரதமர் மோடி மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மீது சூதாட்ட செயலி ஊழல் புகாரை முன்வைத்தார். அது மாநிலத்தில் பற்றி எரியும் சூழலில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மக்களுக்கு எக்ஸ் தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சத்தீஸ்கர் மக்கள் பழங்குடி சமூகத்தின் நலனுக்காக, விவசாயிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக ஊழலை ஒழிக்கும் வகையில் வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார்.

மிசோரம் களம் வித்தியாசமானது: சத்தீஸ்கரில் மிகத் தெளிவாக இரு பெரும் கட்சிகளுக்கு இடையே மட்டுமே மோதல் என்றால் மிசோரம் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. அங்கு இந்த இரு பெரிய கட்சிகளுக்குமே பெரிதாக மவுசு இல்லை. அங்கு மக்கள் மனம் கவர்ந்த கட்சிகளாக மிசோ தேசிய முன்னணி (Mizo National Front -MNF) மற்றும் சோரம் மக்கள் இயக்கம் (Zoram Peoples' Movement- ZPM) ஆகிய கட்சிகள் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மிசோரம் மக்களே நாளை நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது காங்கிரஸுக்காக வாக்களியுங்கள். நாங்கள் உங்களுடைய பாரம்பரியம், கலாசாரம், மொழி ஆகியனவற்றைப் பாதுகாப்போம். இதற்கு நான் உறுதி கூறுகிறேன்" என்றார்.

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற முதல்வர்: இந்நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிக்கு வந்த மிசோரம் முதல்வர் சோரம்தங்கா வாக்களிக்க இயலாமல் திரும்பிச் சென்றார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம், "நான் வாக்களிப்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றார்கள். அதனால் சிறிது நேரம் பொறுத்திருந்துப் பார்த்தேன். இயந்திரம் சரியாகவில்லை. அதனால் திரும்பிச் செல்கிறேன். எனது தொகுதிக்குச் சென்று ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு வந்து வாக்களிப்பேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x