Published : 06 Nov 2023 03:32 PM
Last Updated : 06 Nov 2023 03:32 PM

நிபுணர் குழு அமைத்தால் மட்டும் காற்று மாசு கட்டுப்பட்டுவிடுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: "நிபுணர் குழு அமைத்தால் மட்டும் காற்று மாசு கட்டுப்பட்டுவிடுமா?" என்று பொது நல வழக்கு தொடர்ந்த நபருக்கு கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு சமீப காலமாக மிக மோசமாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க மாநில அளவில் நிரந்தர நிபுணர் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜய் நாராயண்ராவ் கஜ்பஹார் என்பவர் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இது தொடர்பாக கூறுகையில், "காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைஇ என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அப்படியிருக்க உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழு அமைத்து உத்தரவிட்டால் மட்டும் காற்று மாசுபாடு கட்டுப்பட்டுவிடுமா?" என்று வினவியது. இதனையடுத்து, மனுதாரர் தனது பொது நல மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த மனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக இருக்கிறது. திங்கள்கிழமை (நவ.6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 488 ஆக இருந்தது. சஃபார் (SAFAR - System of Air Quality and Weather Forecasting And Research) கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை இது 488 ஆக மிகவும் மோசமடைந்துள்ளது. காற்று மாசை எதிர்கொள்ள காற்று தர மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் கிராப்-4 (GRAP-4) கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் (Graded Response Action Plan) -ஐ அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது கருத்தை முன்வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x