ஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு: ராஜஸ்தான் அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை

ஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு: ராஜஸ்தான் அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை
Updated on
1 min read

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இன்று திடீரென பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.

இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது. அப்போது தனது அரசுக்கு உள்ள பலத்தை நிரூபிக்க முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளார். தனக்கு 102 எம்எல்ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதால் குதிரை பேரம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் எம்எல்ஏ.க்களின் விலை முதல் தவணையாக ரூ.10 கோடி, மீண்டும் ரூ.15 கோடியில் இருந்து இப்போது வரம்பு இல்லாமல் அவர்களுக்கான விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும் என்று சச்சின் பைலட்டை மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த 3 வாரங்களாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஜெய்ப்பூர் அருகே ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஜெய்சால்மாருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பண்ணை வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இன்று திடீரென பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டப்படும்போது பாஜக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in