Published : 03 Nov 2023 03:35 PM
Last Updated : 03 Nov 2023 03:35 PM

”தெலங்கானா தேர்தலில் போட்டி இல்லை; காங்கிரஸுக்கு ஆதரவு” - ஒய்.எஸ்.சர்மிளா அறிவிப்பு

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஒய்.எஸ்.சர்மிளா

ஹைதராபாத்: தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே பரபரப்பான மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன்.

தெலங்கானா மாநிலம் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தெலங்கானா மக்கள் கே.சி.ஆரின் தவறான ஆட்சியால் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர், அவரின் கொடூரமான ஆட்சியைக் கவிழ்க்கத் மக்கள் தயாராக உள்ளனர். இந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஒரே குடும்பத்தின் பேராசை மற்றும் கொடுங்கோன்மையால் தெலங்கானாவின் செல்வம் எப்படிப் பறிக்கப்பட்டது என்பதை மக்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். கே.சி.ஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது” என்றார் சர்மிளா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x