Last Updated : 16 Jan, 2018 11:54 AM

 

Published : 16 Jan 2018 11:54 AM
Last Updated : 16 Jan 2018 11:54 AM

26/11 தீவிரவாதத் தாக்குதல்: சிறுவன் மோஷேவுடன் நரிமன் ஹவுஸ் செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளான நரிமன் இல்லத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், தாக்குதலிருந்து தப்பித்த சிறுவன் மோஷேவும்  நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

2008 நவம்பர் 26, இந்திய வரலாற்றில் மறக்க முடியாது நாள். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய மும்பை நகரமும் அதை மீட்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எவராலும் மறக்க முடியாது.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர், கடல் வழியாக கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பைக்குள் ஊடுருவினர். தாஜ் ஓட்டல், மும்பை ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் குறிவைத்த இடங்களில் ஒன்று யூதர்கள் அதிகம் வசிக்கும் நாரிமன் ஹவுஸ் பகுதி. அங்கே ஒரு வீட்டில் நுழைந்த தீவிரவாதிகள் யூத தம்பதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களின் குழந்தையை மட்டும் வீட்டுப் பணிப்பெண் தன்னுடன் எடுத்துச் சென்று பதுங்கிக் கொண்டார். பல மணி நேரத்துக்குப் பின்னர் குழந்தையும், அப்பணிப்பெண்ணும் மீட்கப்பட்டனர். குழந்தையாக நடப்பதை அறியாமல் இருந்த மோஷே இப்போது விவரம் அறிந்த சிறுவனாக இந்தியா வந்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் சிறுவன் மோஷே வியாழக்கிழமை நாரிமன் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் நினைவஞ்சலி கூட்டத்தில் இருவரும் பங்கேற்கின்றனர்.

இது குறித்து நரிமன் ஹவுசை தற்போது நிர்வாகித்து வரும் ராபி கூறும்போது, "மோஷேவின் வருகையை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த இடத்தில் அவரது பெற்றோரிடமிருந்து கடைசி முத்தத்தை அவர் பெற்றார் இந்த இடத்தில் அவரது உயிர் இந்திய பெண் ஒருவரால் காப்பாற்றப்பட்டது. “ என்றார்.

முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு இஸ்ரேல் பயணத்தின்போது மோஷேவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 நாள் சுற்றுப்பயணம்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர் பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x