Published : 25 Oct 2023 04:01 PM
Last Updated : 25 Oct 2023 04:01 PM

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் இனி ‘பாரத்’ - என்சிஇஆர்டி குழு பரிந்துரை

பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ என மாற்ற பரிந்துரை | பிரதிநிதித்துவப் படம்

டெல்லி: சி.பி.எஸ்.இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel) பரிந்துரைத்துள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அண்மையில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் வெளிநாட்டுப் பயண அறிவிப்பிலும், ஜி20 மாநாட்டில் பிரதமர் இருக்கையிலும் ‘பாரத்’ என்றே குறிப்பிடப்பட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதனால், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் ‘இந்தியா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரை வழங்கி உள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கெனவே இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறுகிறது. பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாடப் புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel) பரிந்துரைத்துள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x