Published : 25 Oct 2023 02:45 PM
Last Updated : 25 Oct 2023 02:45 PM

“அப்படி சொல்லியிருக்கக் கூடாது” - அகிலேஷை கமல்நாத் அணுகிய விதத்தில் திக்விஜய் சிங் அதிருப்தி

திங்விஜய் சிங் | கோப்புப் படம்

போபால்: சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்த கமல்நாத்தின் அலட்சியமான அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "யாரைப் பற்றியும் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" என்று அதிருப்தியுடன் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குறித்து திக்விஜய் சிங் கூறும்போது, "கமல்நாத் என்ன சொன்னார், அவர் எப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், ஒருவரைப் பற்றி அப்படி யாரும் சொல்லக் கூடாது. சமாஜ்வாதி கட்சியுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பேச என்னிடம் ஒரு குழுவை கமல்நாத் அனுப்பினார். அந்தக் குழுவுடனான கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி 6 தொகுதிகள் கேட்பதாக விவாதிக்கப்பட்டது. விவாதத்துக்குப் பின்னர், சமாஜ்வாதி கட்சிக்கு 4 தொகுதிகள் கொடுக்கலாம் என்று கமல்நாத்துக்கு நான் அறிக்கை அனுப்பினேன்.

அதேபோல் ‘இண்டியா’ கூட்டணிக்கும் நமக்கும் என்ன மாதிரியான உறவு என்று நான் மத்திய தலைமையிடம் செயற்குழுக் கூட்டத்தில் கேட்டேன். அதனை மாநிலத் தேர்தலில் மாநிலத் தலைமையிடமே விட்டுவிட்டார்கள். மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி ஒன்றாக போட்டியிடும். ஆனாலும், மாநிலத் தேர்தலில் எங்களுக்கு வேறு சில பிரச்சினைகள் உள்ளன.

அகிலேஷ் யாதவ் மிகவும் நேர்மையான மனிதர், படித்தவர். கட்சியையும், குடும்பத்தையும் அவர் கையாளுகிறார். தொகுதிப் பங்கீடு விவாதம் எங்கே தவறாகப் போனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், கமல்நாத் ஒரு நேர்மையான உடன்பாட்டை எட்ட விரும்புகிறார். கூட்டணியில் நட்புரீதியான சண்டைகள் வரத்தான் செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சில நாட்களுக்கு முன்னர் சிந்த்வாரா மாவட்டத்தில் செய்தியாளர்ளைச் சந்தித்தபோது, அவரிடம் அகிலேஷ் யாதவ் துரோகம் எனக் கூறியது பற்றிக் கேட்டபோது, “அகிலேஷை மறந்துவிடுங்கள்” என்ற பொருளில் “ஹரே பாய் சோடோ அகிலேஷ்... விகிலேஷ்...” என்று அலட்சியமாக தெரிவித்தார்.

முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக பக்கம் சாய்வது போல் தெரிகிறது. நாட்டின் பழையான கட்சி, எங்களுக்கு துரோகம் செய்யும் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்க மாட்டேன். மாநில அளவில் கூட்டணி இல்லை என்று எனக்குத் தெரிந்திருந்தால், எங்கள் கட்சியினரை திக்விஜய் சிங்கை சந்திக்க நான் அனுப்பியிருக்கவே மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x