Published : 22 Oct 2023 02:14 PM
Last Updated : 22 Oct 2023 02:14 PM

மத ரீதியிலான காரணங்களுக்காக இந்தியா ஒருபோதும் போர் செய்ததில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

மோகன் பாகவத் | கோப்புப் படம்

நாக்பூர்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயானப் போரைப் போல் மத ரீதியிலான காரணங்களுக்காக இந்தியா ஒருபோதும் போர் செய்ததில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இப்போது போர் நடக்கிறது. ஆனால் இந்தியா ஒருபோதும் மத ரீதியிலான காரணங்களுக்காகப் போர் செய்ததில்லை. ஏனெனில் இந்தியக் கலாச்சாரம் அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கிறது. அனைத்துப் பிரிவினரையும் மதிக்கிறது. அந்தக் கலாச்சாரம் தான் இந்துக் கலாச்சாரம். உலகின் பிற பகுதிகளில் போர் நடக்கிறது. உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஹமாஸ். ஆனால் நம் தேசத்தில் இதுபோன்ற சண்டைகள் ஏற்பட்டதில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். 2 மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகளில் பலர் உயிரிழந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல் சில மணி நேரங்களில் பதில் தாக்குதலைத் தொடங்கியது. தாக்குதல் தொடங்கியவுடனேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தென்யாகு கூறியது, "ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும்" என்பதுதான். அந்த நாள் முதல் இன்று 16வது நாளாக இஸ்ரேல் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிப்பலி 4300ஐ கடந்துள்ளது. நேற்றிரவு (அக்.21) இரவு இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முதன்முறையாக காசாவுக்குள் நிவாரணப் பொருட்கள் சென்று சேர்ந்தன. இந்நிலையில், 6.5 டன் மருந்து மற்றும் 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானம் எகிப்தின் அல் அரிஸ் விமான நிலையத்துக்கு கிளம்பி உள்ளது. நிவாரணப் பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், ஸ்லீப்பிங் பைகள், தார்ப்பாய்கள், சுகாதார பொருட்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x