Published : 21 Oct 2023 06:23 PM
Last Updated : 21 Oct 2023 06:23 PM

”ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி... எழுதிக் கொடுத்ததைப் படிப்பார்” - தெலங்கானா முதல்வர் மகள் கவிதா விமர்சனம்

கவிதா

ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி. அவர் உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார் என்று தெலங்கான முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதா விமர்சனம் செய்திருக்கிறார்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடக்க உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவிருக்கிறது. இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கிடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு எம்,பி.யுமான ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தபோது, "இந்தத் தேர்தலில் கேசிஆர் தோல்வியைத் தழுவுவார் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தேர்தலில் டோரலா (நிலப்பிரபுக்கள்) தெலங்கானாவுக்கும், பிரஜலா தெலங்கானாவுக்கும் (பொதுமக்கள்) தான் போட்டியே நடக்கிறது. அதாவது ராஜாவுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான போட்டி இது. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியே நின்றிருக்கிறார். மாநிலத்தின் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது’’ என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கு எதிர்வினையாற்றிய தெலங்கானா அமைச்சரும், மாநில முதல்வரின் மகனுமான கேடிஆர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ராகுல் காந்தி எந்த ஒரு முன்தயாரிப்பும் செய்யாமல் உள்ளூர் தலைவர்கள் எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் ஒருவர். அவரை நாங்கள் தலைவராகவே கருதவில்லை. அவர் ஒரு வாசிப்பாளர், அவ்வளவே. எழுதிக் கொடுத்தவற்றை வாசித்துவிட்டுச் செல்கிறார். அதில் என்ன எழுதிப்பட்டிருக்கிறது என்று கவனம் செலுத்துவதில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதா தெலங்கானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ராகுல் காந்தி சிங்கம் அல்ல (Babbar Sher) அவர் ஒரு காகிதப் புலி. அவர் யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே படுத்துவிட்டுப் போவார்.உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார்.

இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை தெலங்கானா அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம். நாங்கள் எங்கள் மாநிலத்திற்காக நிறைய போராடியிருக்கிறோம். அடுத்தமுறை இங்கே வந்தால் தோசை கடைக்கு சென்று தோசை சாப்பிடாமல், இங்குள்ள மக்களைச் சந்தியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு தெலங்கானா மக்களின் வலி புரியும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x