Published : 16 Oct 2023 05:54 AM
Last Updated : 16 Oct 2023 05:54 AM

ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராமாயண நடிகர் போட்டி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான காலம் முடிவடையவுள்ளதையொட்டி நவம்பர் 17-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், 144 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்றுவெளியிட்டது. அதேபோன்று, சத்தீஸ்கர் மாநில தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்ட மத்திய பிரதேச வேட்பாளர் பட்டியலில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து புத்னி தொகுதியில் தொலைக்காட்சி நடிகர் விக்ரம் மஸ்டல் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனந்த் சாகரின் 2008 தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராமாயணத்தில் ஹனுமான் வேடத்தில் நடித்ததற்காக மஸ்டல் மிகவும் பிரபலமானவர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள்முதல்வரான கமல்நாத் அவரது கோட்டையாக கருதப்படும் சிந்த்வாராவிலிருந்து போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர் திக்விஜய சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங்கின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் ரகோகர் தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் தேர்தல்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 17-ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 30 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில், தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 22 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் பூபேஷ் பாகெல்பதான் தொகுதியில் பாஜகவின்விஜய் பாகெலை எதிர்த்து போட்டியிடவுள்ளார். துணை முதல்வர்தியோ அம்பிகாபூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

சித்ரகோட் தொகுதியில் பஸ்தார் தொகுதி எம்பியும், மாநில காங்கிரஸ் தலைவருமான தீபக் பைஜ் நிறுத்தப்பட்டுள்ளார். 2018-ல் இத்தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2019-ல் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 8 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அதற்கு பதிலாக, 13 பொது தொகுதிகளில் 9 ஓபிசி வகுப்பினரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x