Last Updated : 29 Jan, 2018 03:17 PM

 

Published : 29 Jan 2018 03:17 PM
Last Updated : 29 Jan 2018 03:17 PM

2017-18-ம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை: 20 முக்கிய அம்சங்கள்

2017-18ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் உரையுடன் இன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரு அவைகளிலும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.

1. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார வளர்ச்சி) 2018-19ம் நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும்.

2. வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியா பெறும்.

3. நடப்பு 2017-18ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாகவே இருக்கும்.

4. அடுத்த நிதியாண்டில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை கட்டுப்படுத்த கொள்கை கண்காணிப்பு தேவை.

5. வேளாண்மைக்கு ஊக்கம் அளித்தல், ஏர் இந்தியா தனியார் மயம், அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடு ஆகியவற்றுக்கு அடுத்த ஆண்டு கொள்கை வகுக்க வேண்டும்.

6. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கிறது.

7. மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக, ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

8. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிதி சேமிப்பு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

9. வாராக்கடனை சமாளிக்க திவால் சட்டம் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது.

10. 2017-18ம் ஆண்டில் நாட்டில் சில்லரை விற்பனை பணவீக்கம் 3.3 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 6 ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.

11. நீதித்துறையில் இருக்கும் காலதாமதம், வழக்குகள் தேக்கம், ஆகியவற்றை களைவது அவசியம்.

12. நகர்மயமாதல் காரணமாக, விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

13. நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி கழிவு தொகையாக ரூ.20 ஆயிரத்து 339கோடி வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

14. 2017-18ம் ஆண்டில் நாட்டின் சேவைத் துறை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

15. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவில் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டு வலிமையுடன் இருக்கிறது.

16. தொழிலாளர் சட்டங்களில் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.

17. ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், கிராமங்களில் கழிவறை வசதி 2014ம்ஆண்டுக்கு பின் 2018ம் ஆண்டு ஜனவரி வரை 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

18. கல்வி, சுகாதாரத்துடன் கூடிய முழுமையான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை தரப்படும்.

19. நாட்டில் நிலவும் கடுமையான காற்று மாசைக் குறைக்க மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

20. 2017-18ம்ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் பாலினம் தொடர்பான விஷயங்கள் பிங்க் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x