Published : 09 Jan 2018 09:12 AM
Last Updated : 09 Jan 2018 09:12 AM

ஆதார் தொடர்பாக செய்தி வெளியிட்ட நிருபர் மீது வழக்கு?- பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும்- மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

“ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்” என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் அந்த பத்திரிகையின் பெண் நிருபர் ரச்னா கைரா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் எந்தவொரு தனிநபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அடையாள தெரியாத நபர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு ஆதார் தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனம், நிருபர் ஆகியோர் போலீஸாரின் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பத்திரிகை நிறுவனம், நிருபரிடம் ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிருபர் கருத்து

இந்த விவகாரம் குறித்து ‘தி டிரிபியூன்’ பத்திரிகை நிருபர் ரச்னா கைரா கூறியிருப்பதாவது:

எனது செய்தியின் காரணமாக ஆதார் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதார் முறைகேடுகளில் சிறு துளி அளவே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆதார் தொடர்பான எனது விசாரணையை நிறைவு செய்துள்ளேன். இன்னும் சில நாட்களில் பல்வேறு முறைகேடுகளை செய்தியாக வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை நிருபர் ரச்னாவுக்கு இந்திய, பன்னாட்டு ஊடக சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

“ஆதார் திட்டத்துக்காக பதிவு செய்யப்படும் தனி நபரின் கருவிழி, கைரேகை விவரங்கள் வெளியே கசிந்து தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இது தனிநபரின் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளது” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘தி டிரிபியூன்’ செய்தி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x