Published : 10 Oct 2023 07:34 AM
Last Updated : 10 Oct 2023 07:34 AM
புதுடெல்லி: மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக நேற்று அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது. எம்.பி.க்கள் தியா குமாரி (வித்யாதர் நகர்), பாகீரத் சவுத்ரி (கிஷான்கர்), கிரோடி லால் மீனா (சவாய் மாதோபூர்), தேவ்ஜி படேல் (சன்ச்சோர்), நரேந்திர குமார் (மாண்டவா), ராஜ்யவர்தன் ரத்தோட் (ஜோத்வாரா), பாபா பாலக்நாத் (திஜாரா) ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இப்பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளராக பாஜக எவரையும் முன்னிறுத்தவில்லை. பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரைதான் இங்கு முதல்வர் வேட்பாளர் என்று பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்தார்.
இதுபோல் ம.பி.க்கான வேட்பாளர் பட்டியலில் 57 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியிலும் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தாட்டியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதுபோல் சத்தீஸ்கருக்கான வேட்பாளர் பட்டியலில் 64 பேர் இடம் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் ரேணுகா சிங், மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, கோமதி சாய் ஆகிய 3 எம்.பி.க்கள், முன்னாள் முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT