Published : 30 Dec 2017 04:49 PM
Last Updated : 30 Dec 2017 04:49 PM

2017-ல் மக்களை ஈர்த்த மொபைல் போன்கள்: 2018 சந்தை எப்படி இருக்கும்?

இந்திய சந்தையில் புதிய புதிய மொபைல் போன்கள் வந்துவிட்டாலும், இந்த 2017-ம் ஆண்டிலும், இரண்டு சிம்கார்டு மற்றும் பல மணிநேரம் உழைப்பை வழங்கும் பேட்டரியும் கொண்ட மொபைல் போன்களே அதிகம் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆனால, வரும் 2018-ம் ஆண்டில் நவீன தொழில்நுட்படத்துடன், பார்க்க அசத்தலாக இருக்கும் பெரிய திரை கொண்ட மொபைல் போன்களுக்கு கூடுதல் மவுசு இருக்கும் என சந்தை வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.

மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை 2017-ம் ஆண்டில் முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கு 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது.

இந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலன மொபைல் போன்கள் இந்த அம்சங்களுடனேயே வலம் வந்தன. சாம்சங், மைக்ரோமேக்ஸ் மற்றும் விவோ என எந்த ஒரு நிறுவனத்தின் மொபைல் போனும் இந்த அம்சங்கள் தங்கள் மொபைல் போன்களில் இருப்பதை உறுதி செய்தன. 18:9 அளவிலான இந்த மொபைல் போன்கள் போதுமான அளவு காட்சிகளை காணும் அளவிற்கு உருவாக்கப்பட்டன. விலை உயர்ந்த சில மொபைல் போன்கள் மட்டுமின்றி, சீனா மற்றும் உள்நாட்டு தயாரிப்பாளர்களும் கூட தங்கள் தயாரிப்புகளில் இந்த அம்சங்களுடன் தயாரித்தனர்.

ஸியோமி, ஆப்போ, விவோ மற்றும் லினோவா உள்ளிட்ட நிறுவனங்களின் மொபைல் போன்கள் இந்திய சந்தையை 2017-ம் ஆண்டு முழுவதும் ஆக்கிரமித்து இருந்தன. சாம்சங் போன்கள் ஆண்டு முழுவதும் சந்தையை ஆக்கிரமித்து இருந்தபோதிலும் செப்டம்பருடன் முடிந்த காலாண்டு வரையில் ஸியோமி சரியான போட்டியாக திகழ்ந்தது. குறிப்பாக கடை விற்பனையை இலக்காகக் கொண்டு இருந்த சாம்சங்கிற்கு, ஸியோமி கடும் போட்டியாக விளங்கியது.

இந்தப் போட்டியில் சீன நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகஸ்ட் மாதம் டோக்லாம் பிரச்சினை காரணமாக, சீனா - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டபோது, மொபைல் போன் தயாரிப்பாளர்கள் சீன பொருட்களை பயன்படுத்தும்போது, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ளுமாறு கூறியது. இதுவும் மொபைல் போன் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தின.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் எஸ்இ இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த போன்களும் இந்த சந்தையில் வலம் வந்தன.

‘கவுன்டர்பாயிண்ட்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை இந்த ஆண்டு 13.4 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. வரும் 2018-ல் இது, 15.5 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி சாதாரண மொபைல் போன்களின் விற்பனையும் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் சாதாரண மொபைல் போன்கள் 14.3 கோடி அளவிற்கு விற்பனையாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்திய மக்கள் தொகையில் கணிசமானோருக்கு ஸ்மார்ட் போன்களைவிடவும், சாதாரண மொபைல் போன்களே போதுமானதாக உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி டேட்டா வசதியுடன், அளவில்லா போன்களும் இலவசமாக வாரி வழங்கியது. இதன் பின் பல நிறுவனங்களும் தங்கள் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. இது, வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இதுமட்டுமின்றி 1,500 ரூபாயிலான ஜியோ போன் ஏராளமா வசதிகளுடனும், 36 மாதங்கள் இலவச இணைப்பு உள்ளிட்ட சலுகைகளையும் வழங்குகிறது. இதனால் மற்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8, ஸியோமியின் ரெட்மி 4ஏ ஆகியவை புதிய வாடிக்கையாளர்களை ஸ்மார்ட் போன் பக்கம் திருப்பின. 8,000 ரூபாயில் முக்கிய அம்ங்களுடன், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருந்த மொபைல் போன்களுக்கு இந்த ஆண்டு நல்ல சந்தை வாய்ப்பு இருந்தது.

வரும், 2018-ம் ஆண்டைப் பொறுத்தவரையில், விலை அடிப்படையில் பார்த்தால், ரூ. 5000 மொபைல் போன்களுக்கு 23 சதவீதமும், ரூ. 8000 - 20,000 ரூபாய் வரையிலான விலை கொண்ட மொபைல் போன்கள் 43 சதவீதமும், 30,000 ரூபாய்க்கும் அதிமான விலை கொண்ட பிரீமியம் ரக மொபைல் போன்களுக்கான சந்தை 3 சதவீத அளவிற்கும் சந்தை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x