

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலை 11.20 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் தேனாம்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே காலமாகிவிட்டார்.
ஆகஸ்ட் 7, 1925-இல் கும்பகோணத்தில் டாக்டர் எம்.கே சாம்பசிவன் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன், அங்கு பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். விவசாய அறிவியலில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம் மற்றும் சுதந்திர இயக்கத்தில் அவரது தந்தையின் பங்கேற்பு மற்றும் மகாத்மா காந்தியின் செல்வாக்கு அவரை பாடத்தில் உயர் படிப்பைத் தொடர தூண்டியது. கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.
“டாக்டர் சுவாமிநாதன் இந்தியாவின் பல முன்னாள் பிரதமர்களுடனும், மாநிலத் தலைவர்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றிய ‘பசுமைப் புரட்சி’யின் வெற்றிக்காக, உணவு உற்பத்தியில் குவாண்டம் முன்னேற்றத்துக்கும், “பட்டினி இல்லா இந்தியாவுக்கும் வழிவகுத்தது. நிலையான விவசாயத்துக்கான அவரது வாதங்கள் அவரை நிலையான உணவுப் பாதுகாப்புத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக்கியது. உயர் விளைச்சல் தரும் கோதுமை வகைகளை உருவாக்குவதில் பிரபல அமெரிக்க பண்ணை விஞ்ஞானியும் 1970 நோபல் பரிசு பெற்றவருமான நார்மன் போர்லாக் உடன் நெருக்கமாக பணியாற்றினார்.
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், எம் எஸ் சுவாமிநாதன் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், பயிற்சியின் மூலம் தாவர மரபியல் நிபுணரும், சென்னையிலுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் செயல்பட்டவர். விவசாயிகளுக்கான இந்திய அரசின் தேசிய ஆணையத்தின் தலைவராகவும், அறிவியல் மற்றும் உலக விவகாரங்களுக்கான பக்வாஷ் மாநாடுகளின் தலைவராகவும், உணவுப் பாதுகாப்புக்கான உலகக் குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழுவின் (HLPE) தலைவராகவும் பணியாற்றியவர்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர். இந்தியாவின் பசுமைப் புரட்சியில் அவரது தலைமைத்துவத்துக்காக முதல் உலக உணவுப் பரிசு மற்றும் பத்ம விபூஷன், ராமன் மகசேசே விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நினைவுகூர்ந்துள்ளது.
வேளாண் விஞ்ஞானிக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழஞ்சலி: “உணவுப் பாதுகாப்புக்காக தொலைநோக்கு பார்வையுடன் அரயாது உழைத்தவர். இந்திய வேளாண் விஞ்ஞானத்தின் சிறந்த பாரம்பரியத்தை அவர் விட்டுச் செல்கிறார். அது பாதுகாப்பான மற்றும் பசி இல்லாத எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு வழிகாட்டியான ஒளியாக விளங்கும்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை துறைக்கான புரட்சிகரமான பங்களிப்பினையும் தாண்டி எம்.எஸ்.சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அவரை, பொருளாதார சுற்றுச்சூழலின் தந்தை என்று அழைத்தது. இது மிகவும் பொருத்தமான அடைமொழியாகும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்: "வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதனின் மறைவு, அறிவியல் துறைக்கும் தமிழகத்துக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத் தலைவர்கள் புகழஞ்சலி: "பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த அறிவியல் அறிஞரான எம்.ஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென பரிந்துரைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
"வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுடைய மறைவு, விவசாயத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவால் விவசாய ஆராய்ச்சி உலகம் சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பேரிழப்பாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” - அதிமுக: "இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்: தூய்மை, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, உள்நாட்டு பொருட்களுக்கு குரல் கொடுத்தல் ஆகியவை சார்ந்த வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வருமாறு யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மணிப்பூருக்கு அனுப்ப முடிவு: மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்கு திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
விஸ்வகர்மா திட்டம்: 10 நாளில் 1.40 லட்சம்+ விண்ணப்பங்கள்: பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் குழுவாக இணைந்து இந்தப் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.