

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவால் விவசாய ஆராய்ச்சி உலகம் சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எம்.எஸ்.சுவாமிநாதன் (98) இன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில், நல்ல செல்வாக்கு பெற்ற மருத்துவம் பயின்ற குடும்பத்தில் 1925 ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்த எம். எஸ்.சுவாமிநாதன் சிறுவயதில் அண்ணல் மகாத்மா காந்தியின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். தேச விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்தார். உழவுத் தொழில் மீது ஆர்வம் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அது தொடர்பாக தொடர்ந்து பயின்று பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர். 1960 ஆம் ஆண்டுகளில் நாடு எதிர் கொண்ட கடுமையான உணவுப் பஞ்சத்தை சமாளிக்க 'பசுமை புரட்சி'க்கு வித்திட்டவர்.
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஒன்றிய அரசில் வேளாண்மைத் துறை அமைச்சர்களாக பணியாற்றிய சி.எஸ்.சுப்பிரமணியம், ஜெகஜீவன் ராம் ஆகியோருடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டவர். உலகளவிலான வேளாண்மை, நீர் நிர்வாகம், நவீன விவசாயம் குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். உழவுத் தொழில் ஆராய்ச்சி உலகில் மின்னும் தாரகையாக ஜொலித்தவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில், விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று செயப்பட்டவர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு, உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிதம் அதிகமான தொகை சேர்த்து, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என வலுவாக பரிந்துரை வழங்கியவர். எம்.எஸ்.சுவாமிநாதன் வாழ்விணையர் மீனா சுவாமிநாதன் அண்மையில் காலமாகிவிட்டார். இவர்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்படும் சௌமியா சுவாமிநாதன், பெங்களூருவில் செயல்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வுப் பேராசிரியர் மதுரா சுவாமிநாதன், இங்கிலாந்து நாட்டில் பேராசிரியாக பணியாற்றி வரும் நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களால் உருவாக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவால் விவசாய ஆராய்ச்சி உலகம் சிறந்த வழிகாட்டியை இழந்துவிட்டது. அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.