புகழஞ்சலி - எம்.எஸ்.சுவாமிநாதன் | “பட்டினி இல்லாத இந்தியாவே தனது கனவாக முழக்கமிட்டவர்!” - வைகோ

இடது: எம்.எஸ்.சுவாமிநாதன் | வலது: வைகோ
இடது: எம்.எஸ்.சுவாமிநாதன் | வலது: வைகோ
Updated on
1 min read

சென்னை: "பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த அறிவியல் அறிஞரான எம்.ஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என்று பலராலும் அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், 98 வயதில் முதுமை காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது தந்தையார் ஒரு மருத்துவர். தன்னைப் போலவே தன் மகன் சுவாமிநாதனும் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், வங்கதேசத்தில் நிலவிய பஞ்சம் காரணமாக வேளாண்மைத் துறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று சுவாமிநாதன் விரும்பினார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலை பட்டமும் பெற்ற இவர், ஐபிஎஸ்அதிகாரியாகவும் தேர்வு பெற்றார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, பின்னர் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையிலும் அரசு அலுவலராக பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டில், உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் மூலம் அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இதனை கோதுமைப் புரட்சி என்று பாராட்டினார்.

சீன நாட்டிலிருந்து நெல் வகைகளை இறக்குமதி செய்து, நெல் விளைச்சலிலும் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் உயர்ந்திட இவர் பணியாற்றினார். “பட்டினி இல்லாத இந்தியாவே என் கனவு” என்று முழக்கமிட்ட இவர், அதனை நிறைவேற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கினார்.

இந்திய அரசின் வேளாண்மைத் துறைச் செயலாளர், திட்டக் குழு உறுப்பினர் போன்ற உயர்ந்த பொறுப்புகளை அலங்கரித்த இவர், கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ‘வால்வோ’ விருது, ‘ராமன் மகசேசே’ விருது முதலான 40க்கும் அதிகமான விருதுகளையும் உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக் கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்று மிகச் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கினார்.

ஆசியாக் கண்டத்தில் 20-ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க 20 அறிஞர்களில் ஒருவராக ‘டைம்’ பத்திரிகை எம்.எஸ்.சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது.இவ்வாறு பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த அறிவியல் அறிஞரான எம்.ஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது இரங்கலையும், அவரது மறைவால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in