Published : 23 Sep 2023 05:13 AM
Last Updated : 23 Sep 2023 05:13 AM

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோவுக்கு நிலம் வழங்கியவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவுக்கு நிலங்களை வழங்கியவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஒரு தனித்தீவில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தான் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆந்திரா-தமிழக கடல் எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 43 மைல்தூரத்தில் இஸ்ரோ மையம் உள்ளது. இதற்காக கடந்த 1969-ம் ஆண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கிழக்கு நோக்கிய ஏவுதிசை, பூமியின் சுழற்சி, மத்திய நேர்க்கோட்டிற்கு நெருக்கமான இடம் மற்றும் அதிக குடிமக்கள் இல்லாத பாதுகாப்பு பகுதி எனும் பல்வேறு காரணங்களுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இது கடற்கரையில் 27 கி.மீ நீளம் கொண்டதாகும். மொத்தம் 145 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும்.

இஸ்ரோ மையம் அமைவதற்கு முன் இப்பகுதியில் சவுக்கு தோப்புகளும், யூக்கலிப்டஸ் மரங்களும், ஆங்காங்கே நெற்பயிர்களும் பயிரிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரோ மையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்குயாரும் அனுமதியின்றி நுழைய முடியாது. சுமார் 14 ஆயிரம் பேர் 24 மணிநேரமும் ஆயுதம்தாங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் எனும் எச்சரிக்கை உள்ளதாலும், நாட்டிற்கு மிக முக்கியமான ராக்கெட் ஏவுதளம் என்பதாலும் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இஸ்ரோ அமைவதற்கு முன் இங்கு வசித்து வந்தவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகள், மீனவர்கள். பல ஏக்கர் நிலங்களுக்கு இவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தனர்.

1969-ல் இந்த இடத்தை இஸ்ரோவுக்கு தேர்வு செய்த பின்னர், கூடூரு தொகுதியில் உள்ள வாகாடு, சிட்டமூர் ஆகிய இரு மண்டலங்கள் மற்றும் சூலூர் பேட்டை தொகுதியில் உள்ள சூலூர் பேட்டை மற்றும் துரைவாரி சத்திரம் ஆகிய இரு மண்டலங்கள் என மொத்தம் 9 பஞ்சாயத்துகளில் இவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு ஓரளவு பணமும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சொந்த ஊர்களை காலி செய்து விட்டு, தற்போது சுமார் 9 பஞ்சாயத்துகளில் 37,500 பேர் வசித்து வருகின்றனர்.

இஸ்ரோவுக்கு மிக அருகில் புலிகாட் சரணாலயமும் உள்ளது. இது கடந்த 1996ல் துவங்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள பறவைகளின் சரணாலயமும் 1996ல் வன விலங்குகளின் சரணாலயமாக பெயர் மாற்றம் அடைந்தது. இதனை தொடர்ந்து 2002 முதல் 2005 வரை புதிய நிபந்தனைகள், சட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன. தார் சாலை அமைக்க கூடாது, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறுகள் போடக்கூடாது. சத்தம் வரும் மோட்டார்களை உபயோகப்படுத்த கூடாது. லாரி, ஜேசிபி, கிரேன்கள் போன்ற கனரக வாகனங்கள் ஏதும் ஊருக்குள் வரக்கூடாது என வனத்துறை சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது. இதனால் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல், விவசாயிகளாக இருந்தவர்கள், இஸ்ரோவுக்கு தங்களின் நிலங்களை வழங்கிய பிறகு,விவசாய கூலிகளாக பணிக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இஸ்ரோவுக்காக சுமார் 37 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் தற்போது இஸ்ரோவை ஒட்டியே தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பூடி ராய துருவு, நவாப் பேட்டை கிராமங்களுக்கு வெறும் 20 அடிசாலை மட்டுமே போடப்பட்டுள்ளது. இவ்வழியே காலை 2 அரசு பஸ்கள் மாலை 2 அரசு பஸ்கள்இயக்கப்படுகின்றன. இதில் இவ்வூர்காரர்களை தவிர வேறு யாரும் சென்று விட முடியாது. இந்தஊருக்கு பஸ்ஸில் சென்று விட்டாலும், பஸ்ஸில்இருந்து இறங்கியதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர விசாரிக்கின்றனர். ஏற்கெனவே இஸ்ரோ மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே ஆதார் அட்டையை சரி பார்த்தபிறகு இந்த கிராமத்திற்குள் செல்ல முடியும்.இந்த கிராமத்துக்கு செல்ல ஒரு கதவு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பூட்டை பாதுகாவலர்கள் திறந்தால்தான் ஊருக்குள் நுழைய முடியும். அதன்பின்னர் படகில் பயணம் செய்துதான் பூடி ராயதுருவு கிராமத்துக்கு செல்ல முடியும்.

இங்குள்ள முன்னாள் மண்டல தலைவர் மதுசூதன் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரோவின் பலத்த பாதுகாப்பு ஒருபுறம், வன விலங்குகளின் சரணாலய சட்டம் மறுபுறம் என நாங்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஒரு காலத்தில் இஸ்ரோவுக்கு நிலம் வழங்கினால், பிற்காலத்தில் நாட்டிற்கு பல்வேறு பெருமைகள் வரும் என நினைத்து எங்கள் நிலங்களை வழங்கினோம். தற்போது இந்த கிராமங்கள் அனைத்தும் மத்திய ரிசர்வ் படை மற்றும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆதலால், எங்கள் ஊருக்கு சிங்கிள் பேஸ் மின்சாரம் மட்டுமே உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. செல்போன் நெட்வொர்க் வேலை செய்யாது. இஸ்ரோவுக்கு நிலம் கொடுத்த 32 கிராம மக்களில் பலர் விவசாய கூலி வேலைக்கு செல்கின்றனர். காலை, மாலை வரும் 2 அரசு பஸ்களுக்கு கூட சுமார் 4 கி.மீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். இப்பிரச்சினைகளால் இங்குள்ள பல ஆண்களுக்கு திருமணம் ஆகாமல், பிரம்மச்சாரிகளாகவே வாழ்கின்றனர். பெண்களில் கூட பலருக்கு திருமணம் நடைபெறவில்லை.

இவ்வூர்களில் யாரவது இறந்து விட்டால்வெளியூரில் வசிக்கும் எங்களின் உறவினர்கள் இங்கு வர பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். திருமணம் நடைபெற்றால், திருமணத்திற்கு வரும் உறவினர்களின் ஆதார் அட்டைகளை இஸ்ரோ மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் வழங்கி அனுமதி பெற வேண்டும். நாங்கள் சுதந்திர நாட்டில் தான் வசிக்கிறோமா? எனும் சந்தேகம் கூட எங்களுக்கு எழுந்துள்ளது. இவ்வாறு மதுசூதன் ரெட்டி வேதனையுடன் கூறினார்.

வெங்கட ரத்தினம் என்பவர் கூறும்போது, ‘‘இங்கு விவசாயம் செய்ய எங்களை அனுமதிக்கவேண்டும். மீன் பிடிக்க சென்றால் அண்டை மாநிலமான தமிழகத்தின் எல்லையில் மீன்பிடிக்க செல்கிறோம். அங்கும் சில பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. ஆதலால் எங்களுக்கு மீன் பிடிக்க விசைப்படகு வழங்க வேண்டும். குடிநீர் வசதி தேவை. ஓட்டு போட கூட பல கி.மீ சென்றுதான் ஓட்டு போட வேண்டியுள்ளது. இங்கு சாலைகள் அமைத்திட வேண்டும்’’ என்றார்.

பூடி ராயதுருவு கிராமத்தை சேர்ந்த கோவர்தன் குமார் என்பவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். விவசாயத்திற்கு தண்ணீர், சூலூர் பேட்டைக்கு சாலைவழி தேவை, மூன்று பேஸ் மின்சார இணைப்பு தேவை என மனித உரிமை ஆணையத்திற்கு புகார் செய்துள்ளார். வன விலங்குகள் சரணாலயத்தின் சட்டங்கள் கடுமையாக இருப்பதால் இவருக்கு பூடி ராயதுருவில் வீடு மற்றும் விவசாய நிலங்கள் இருந்தும் அவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.

சந்திரயான், ஆதித்யா விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த வெற்றிகளுக்கு பின்னால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வியல் துயரங்கள் மிகவும் கொடுமையாக உள்ளது. அப்போதைய மத்திய அரசு இவர்களுடைய நிலத்தை வாங்கி கொண்டு, அதற்கு ஓரளவு பணமும் கொடுத்து, மாற்று இடமும் வழங்கியது.

ஆனால், நாட்டின் பாதுகாப்பு கருதி ஒருபுறம் பலத்த பாதுகாப்பு காரணமாக நிலம் வழங்கியவர்கள் ஊர்களுக்கே செல்ல முடியாத அளவிற்கு கெடுபிடிகள், விவசாயத்திற்கு தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு தோண்ட முடியாத நிலை, சாலை வசதிகூட இல்லாத வாழ்க்கை இங்கு உள்ளது. தங்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என இஸ்ரோவுக்கு நிலம் வழங்கிய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x