Published : 23 Sep 2023 04:46 AM
Last Updated : 23 Sep 2023 04:46 AM

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி நாடு வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணியினர் வாழ்த்து தெரிவித்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பாஜக மகளிர் அணியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் பெண்கள் தலைமையில் முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற புதிய இந்தியாவின் முயற்சியை நோக்கி அரசு உறுதியுடன் செயல்படுவதை இந்த மசோதா காட்டுகிறது. புதிய இந்தியாவின், ஜனநாயக உறுதியை மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிவிக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் பல தடைகள் இருந்தன. ஆனால், நோக்கம் சுத்தமாகவும், முயற்சிகள் வெளிப்படையாகவும் இருக்கும்போது, அதன் முடிவுகள் தடைகளை தாண்டிச் செல்லும் என்பதை நாம் பார்த்தோம். இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவு கிடைத்தது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பிக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் நமக்கு அளித்தது நமது அதிர்ஷ்டம். நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்காக திட்டங்களை கொண்டு வந்து அவர்களை விடுவிக்க நமது அரசு அனைத்து முயற்சியும் எடுக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய கடந்த 30 ஆண்டுகளாக பாஜக முயற்சி மேற்கொண்டது. நமது உறுதியை நாம் நிறைவேற்றியுள்ளோம். நாடுமுன்னேற்றம் அடைய, முழு பெரும்பான்மை கொண்ட வலுவான மற்றும் உறுதியான அரசு முக்கியம் என்பதை இந்த சட்டம் நிருபித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையை தடுத்துநிறுத்த நாம் சட்டம் கொண்டு வந்தோம். இதனால் முத்தலாக் கொடுமையில் இருந்து கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விடுபட்டனர். முழு பெரும்பான்மையுள்ள அரசு நாட்டில் ஆட்சிக்கு வரும்போதுதான், இதுபோன்ற மிகப் பெரிய பணிகளை நிறைவேற்ற முடிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x