Published : 23 Dec 2017 11:51 AM
Last Updated : 23 Dec 2017 11:51 AM

பிராமண சமூகத்தினர் மீது தரக்குறைவான விமர்சனம்: அமைச்சரின் பதவியை பறித்த ஒடிசா முதல்வர்

பிராமண சமூகத்தினரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக, ஒடிசா மாநில விவசாயத்துறை அமைச்சர் தாமோதர் ரவுத்தை, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பதவி நீக்கம் செய்துள்ளார்.

ஒடிசாவில் விவசாயத்துறை அமைச்சராக பதவி விகித்த தாமோதர் ரவுத், மல்கங்கிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், டிசம்பர் 18ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "எத்தகைய சூழல் உருவானாலும் பழங்குடிகள் யாரிடமும் யாசகம் வேண்டுவதில்லை. ஆனால், பிராமண சமூகத்தினர் தேவை ஏற்படும்போது யாசகம் வேண்டுகின்றனர்" தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது, அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இதையடுத்து, தாமோதர் ரவுத்தை அமைச்சர் பதவியில் இருந்து, முதல்வர் நவீன் பட்நாயக் நீக்கியுள்ளார்.

சாதி, மத, மொழி சார்ந்த விமர்சனங்களை ஏற்க முடியாது

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த ஒரு மதம், ஜாதி, மொழி பேசும் மக்களுக்கு எதிராக பேச, யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற செயல்களை சகித்துக் கொள்ள முடியாது. எனவேதான், தாமோதர் ரவுத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். தாமோதர் ரவுத் நீக்கப்பட்டுள்ளதை, எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

தாமோதர் ரவுத், இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆளும் பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த தலித் சமூகத் தலைவரை பற்றியும் தவறாக விமர்சித்தாக புகார் எழுந்தது.

இதுமட்டுமின்றி விவசாயிகள் தற்கொலை, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றியும் அவர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x