Published : 16 Sep 2023 01:40 PM
Last Updated : 16 Sep 2023 01:40 PM

“காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 5 மாநில தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளோம்” - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே | கோப்புப் படம்

புதுடெல்லி: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முதல்முறையாக ஹைதராபாத்தில் இன்று பகல் 2.30 மணி அளவில் தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த செயற்குழுக் கூட்டத்தின் முதல் நாளான இன்று 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் 6 பேர் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளனர். எங்கள் கட்சியின் 4 முதல்வர்கள் உள்பட 84 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்

விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு நாளை(ஞாயிற்றுக்கிழமை) கூட உள்ளது. இதில் பங்கேற்க 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 149 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். நாளைய தினம் பொதுக்கூட்டமும் நடைபெறும். நாளை மறுநாள் (திங்கள்கிழமை) காங்கிரஸ் எம்பிக்கள் தவிர்த்த மற்ற தலைவர்கள், தெலங்கானாவின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் இது. விரிவுபடுத்தப்பட்ட செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நாங்கள் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x