Last Updated : 23 Dec, 2017 08:29 AM

 

Published : 23 Dec 2017 08:29 AM
Last Updated : 23 Dec 2017 08:29 AM

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு முன்னுரிமை- புதிய சட்டம் கொண்டுவர அரசு முடிவு

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வசதியாக சட்டத் திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் 1983-ம் ஆண்டு கன்னட மொழிக்கும், கன்னடர்களுக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு கல்வியாளர் சரோஜினி மஹிஷி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அரசு மற்றும் தனியார்துறை வேலை வாய்ப்பில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்க பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை 25 ஆண்டுகளாகியும் அமலாகவில்லை.

இந்நிலையில், சரோஜினி மஹிஷி பரிந்துரையை அமல் படுத்த கோரி அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் மைசூருவில் நடந்த கன்னட இலக்கிய கழக மாநாட்டிற்கு தலைமையேற்ற எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டீல், ‘தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இதையடுத்து, கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, தொழில்துறை அமைச்சக அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் டி.பி.ஜெயசந்திரா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது, கர்நாடகாவில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசு மானியமாக நிலம் , நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பின்னர் வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கர்நாடக தொழில் விதிமுறைகள் சட்டம் - 1961-ல் திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்ட மசோதா வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x