Published : 12 Sep 2023 05:12 PM
Last Updated : 12 Sep 2023 05:12 PM

‘இண்டியா’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?

கோப்புப் படம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில், கூட்டணியின் எதிர்கால செயல்திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிபிஐ, சிபிஎம், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 28 கட்சிகள் இண்டியா கூட்டணியில் உள்ளன. இக்கூட்டணியின் முதல் கூட்டம் பிஹாரிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.

பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகள், பிரச்சார உத்திகள், ஒருங்கிணைப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை இந்த குழு மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த குழுவில் கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு (திமுக), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ராவத் (சிவ சேனா), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ராகவ் சதா (ஆம் ஆத்மி), ஜாவெத் அலி கான் (சமாஜ்வாதி கட்சி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (சிபிஐ), ஒமர் அப்துல்லா (தேசியமாநாட்டுக் கட்சி), மெகபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி), சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை கூடவுள்ளது. அப்போது, வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தேர்தல் வியூகம், பிரச்சார வியூகம், பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமூக ஊடகக் குழு, பிரச்சாரக் குழு, ஆராய்ச்சிக் குழு போன்ற பல்வேறு துணைக் குழுக்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x