Published : 12 Sep 2023 02:59 PM
Last Updated : 12 Sep 2023 02:59 PM

பணியாளர்களுக்கு புதிய சீருடை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் சுவாரஸ்யம்

புதுடெல்லி: வரும் 18-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலத்துக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சிறப்பு சீருடை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சீருடையில் நேரு மாடல் ஜாக்கெட்டுகள், காக்கி நிற கால் சட்டைகள் என்று முழுக்க முழுக்க இந்திய சார்பு இருக்கும் என்று தெரிகிறது.

செப்டம்பர் 18-ஆம் தேதி கூட்டத் தொடர் தொடங்கினாலும் கூட 19-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில்தான் புதிய நாடாளுமன்றத்துக்கு இடம்பெயரும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் சிறிய பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஊழியர்களுக்காக புதிய சீருடை தயார் நிலையில் உள்ளது. இவற்றை நிஃப்ட் (NIFT-P) எனப்படும் பாட்னா தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் சீருடை இனி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலான அல்லது மஜெண்டா நிறத்திலான நேரு ஜாக்கெட் மாடலில் இருக்கும். இவற்றில் தாமரைப் பூக்கள் அச்சாகி இருக்கும். கால் சட்டை காக்கி நிறத்திலேயே இருக்கும். அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள்.

நாடாளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சஃபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு (கேமஃப்ளாஜ்) உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பாட்னா நிஃப்ட் பேராசிரியர் தர்மேந்திர ரத்தோர் கூறுகையில், "புதிய சீருடைகள் அவரவர் பணியைப் பிரதிபலிக்கும் வகையிலும், அவைகளின் மாண்பை அடையாளப்படுத்தும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 16 வகையான சீருடைகளை வடிவமைத்துள்ளோம். ஒவ்வொரு பிரிவு பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்றவாறு ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்/பெண் ஊழியர்களுக்கு ஏற்றார் போல் வடிவமைகப்பட்டுள்ளன. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, நிறம் ஆகியனவற்றையும் இந்த சீருடைகள் பிரதிபலிக்கும். அனைத்து சீருடைகளிலும் செல்போனை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேக பாக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x