Published : 30 Dec 2017 02:00 PM
Last Updated : 30 Dec 2017 02:00 PM

நிதித்துறை பறிப்பு: பாஜக மேலிடம் மீது குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கடும் அதிருப்தி

 

குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று அங்கு பாஜக அரசு பதவியேற்று ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், துணை முதல்வரும், படேல் சமூக முன்னணி தலைவருமான நிதின் படேலிடம் இருந்து நிதி உள்ளிட்ட துறைகள் பறிக்கப்பட்டுள்ளதால் அவர் கட்சி மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக நிதின் படேலும் பொறுப்பேற்றார். பதவியேற்புக்குப் பின் புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் நிதின் படேலிடம் இருந்த, நிதி, நகர்புற வளர்ச்சி மற்றும் பெட்ரோலியத் துறைகள் பறிக்கப்பட்டுள்ளன.

நிதித்துறை சவுரவ் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி, பெட்ரோலிய துறைகளை முதல்வர் ருபானி தன்வசம் எடுத்துக் கொண்டார். நிதின் படேலுக்கு சாலை போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிதின் படேல் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வருக்கு அடுத்தநிலையில் துணை முதல்வராக இருந்தபோதிலும், நிதித்துறை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று தனது வழக்கமான பணிகளை கவனிக்க வெளியே வரவில்லை. கட்சி மேலிடத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தவே அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

குஜராத்தில் வியாழனன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோதே அதிருப்தி வெளிப்பட்டது. மாலை 5 மணிக்கு தொடங்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டம், கட்சி மேலிடத்தின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் முக்கிய துறையான நிதி, நிதின் படேலுக்கு வழங்கப்படவில்லை. குஜராத் அமைச்சர் பதவியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட, சவுரவ் படேல் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதுடன், அவருக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நிதின் படேலின் அதிருப்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் படேல், ''பாஜகவால் அவமானப்படுத்தப்பட்டுள்ள நிதின் படேல் எங்கள் அமைப்பில் சேர வேண்டும். படேல் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x