Published : 05 Sep 2023 08:55 AM
Last Updated : 05 Sep 2023 08:55 AM

ஜி20 உச்சி மாநாட்டின் வளாகத்தை அலங்கரிக்கும் 29 நாடுகளின் பாரம்பரிய பொருள்

கோப்புப்படம்

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் வளாகம் 29 நாடுகளின் பாரம்பரிய கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டப வளாகத்தில் (பிரகதி மைதானம்) அமைக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 29 நாடுகளின் பல்வேறு பாரம்பரிய கலைப் பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

சீனாவை 18-ம் நூற்றாண்டில் ஆண்ட கிங் வம்சத்தைச் சேர்ந்த மிகப்பெரிய ஜாடி, இத்தாலியில் உள்ள அப்போலோ சிலை, 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாக்னா கார்ட்டா சாசனம் உள்ளிட்ட பொருட்கள் மாநாட்டு மண்டபத்தை அலங்கரிக்க உள்ளன.

இந்தப் பொருட்களை நேரடியாக அங்கு காண முடியும். மேலும் டிஜிட்டல் வடிவில் திரையிலும் இந்தப் பொருட்களின் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

இந்தியாவின் சார்பில் 4-ம் நூற்றாண்டில் (கிறிஸ்து பிறப்புக்கு முன்பு) எழுதப்பட்ட சம்ஸ்கிருத மொழியை எப்படி எழுதுவது, பேசுவது என்பதை விளக்கும் பாணினி எழுதிய அஷ்டாத்தியாயி நூல் வைக்கப்படும்.

ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் சார்பிலும், 9 சிறப்பு அழைப்பாளர்கள் நாடுகள் சார்பிலும் கலைப்பொருட்கள் வைக்கப்படுகின்றன.

பிரான்ஸ் சார்பில் உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம், ஜெர்மனியின் சார்பில் குட்டன் பெர்க் பைபிள் புத்தகம், மெக்சிகோ சார்பில் கோட்லிக் சிலை, ஜப்பான் சார்பில் கோசோட் எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய ஆடை உள்ளிட்ட கலைப்பொருட்கள் ஜி20 மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்படும்.

மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்ற பிறகு பொதுமக்களுக்கு பாரத் மண்டபம் திறந்து வைக்கப்படும். அப்போது இந்தப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x