Published : 05 Sep 2023 08:06 AM
Last Updated : 05 Sep 2023 08:06 AM

நிலவில் மேலெழும்பி மீண்டும் தரையிறங்கிய லேண்டர்

விக்ரம் லேண்டர் | படம்: இஸ்ரோ

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன.

இந்நிலையில் நிலவில் பகல் பொழுது முடிந்ததால் நேற்று முன்தினம் காலை லேண்டரும், ரோவரும் அணைக்கப்பட்டன.இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

விக்ரம் லேண்டர் தனது ஆய்வுப் பணிகளை நினைத்ததற்கு அதிகமாகவே செவ்வனே முடித்துள்ளது. அதோடு சோதனை முயற்சியாக நிலவில் லேண்டர் தாவிக் குதிக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்த சோதனையும் வெற்றி பெற்றிருக்கிறது.

இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட உடன் லேண்டரின் இன்ஜின்கள் செயல்பட்டு 40 செ.மீ. உயரத்துக்கு மேலே எழும்பியது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சோதனை வெற்றி மூலம் எதிர்காலத்தில் நிலவில் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கும் உத்வேகம் கிடைத்துள்ளது. லேண்டரின் அனைத்து சாதனங்களும் நன்றாக, சிறப்பாக செயல்படுகின்றன. லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

நிலவில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். தற்போது நிலவில் இரவு காலம் தொடங்கி இருக்கிறது. வரும் 22-ம் தேதி மீண்டும் பகல் பொழுது விடியும். பகல் தொடங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும் ரோவரும் மின்சாரத்தை உற்பத்தி செய்து மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்க வாய்ப்பிருக்கிறது. எனினும் லேண்டர், ரோவர் ஆகிய 2 சாதனங்களும் எவ்வளவு காலம் செயல்படும் என்பதை கணிக்க முடியாது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளன. விக்ரம் லேண்டரை நிலவில் மீண்டும் பறக்க வைத்திருப்பதன் மூலம் இஸ்ரோவாலும் அதனை சாதிக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிலவின் பல்வேறு பகுதிகளுக்கு லேண்டரை கொண்டு சென்று ஆய்வு செய்ய முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x