Published : 22 Dec 2017 10:07 AM
Last Updated : 22 Dec 2017 10:07 AM

விஐபி.க்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் எஸ்எஸ்ஜி வீரர்களின் எண்ணிக்கையை 125 சதவீதம் அதிகரிக்க அரசு முடிவு

மத்திய அமைச்சர்கள் உட்பட விஐபி.க்களுக்குப் பாதுகாப்பு வழங்கும், சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்எஸ்ஜி) வீரர்களின் எண்ணிக்கையை 125 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

துணை ராணுவமான மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) ஒரு பிரிவாக எஸ்எஸ்ஜி செயல்படுகிறது. இதில் தற்போது 1,200 வீரர்கள் உள்ளனர். இவர்கள் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முதல்வர்கள் சிலர், ஆர்எஸ்எஸ் தலைவர் போன்ற முக்கிய விஐபி.க்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படை, தேசியப் பாதுகாப்பு படைக்கு (என்எஸ்ஜி) நிகரானது.

இந்நிலையில், எஸ்எஸ்ஜி வீரர்களின் எண்ணிக்கையை 125 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்எஸ்ஜி.க்கு புதிதாக 1500 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி தொடக்கத்திலோ, புதிதாக 1,500 வீரர்களைத் தேர்வு செய்ய உத்தரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

தற்போது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, கிரண் ரிஜுஜு, மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முன்னாள் அமைச்சர் கமல்நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும் சிரோண்மணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் உட்பட முக்கிய பிரமுகர்களுக்குத் தற்போது எஸ்எஸ்ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஐபி.க்கள் பலருக்கு இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அவர்களுடைய பணியை ஏற்றுக் கொள்ளும்படி சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு கடந்த நவம்பர் 23-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 1500 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சற்று சுமை குறையும் என்று சிஐஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x