Published : 01 Sep 2023 08:44 AM
Last Updated : 01 Sep 2023 08:44 AM

மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

கோப்புப்படம்

பெங்களூரு: கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓராண்டுக்குள் பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவின் 3 அலைகள் ஏற்பட்டபின்பு நாட்டில் உள்ள 31 கரோனா மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ்க்கு பின் இறந்த கரோனா நோயாளிகளின் விவரங்களை பெற்று ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இது குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் அபர்னா முகர்ஜி கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றின்போது, பெண்களைவிட ஆண்களே கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பார்த்தோம். இவர்களில் பலர் இறப்புக்கு கரோனாதான் காரணம் என உறுதியாக கூற முடியாது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களின் இறப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வெளியேறி ஓராண்டு நிறைவு செய்த 14,419 பேரை தொடர்பு கொண்டதில், 942 பேர் (6.5%) இறந்திருந்தனர். இவர்களில் 616 பேர் ஆண்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களும், மிதமானது முதல் கடுமையான கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களே அதிகம்.

கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறித்த ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. கரோனா பாதிப்புக்கு முன் தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் உயிரிழக்கவில்லை.

முந்தைய ஆய்வுகள் எல்லாம், தடுப்பூசி இறப்பிலிருந்து எப்படி காப்பாற்றியது என்பதில் கவனம் செலுத்தியது. ஆனால், தற்போதைய ஆய்வுகள் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் இடையே இறப்பை பற்றி ஆராய்கிறது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர்களில் சிலர் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்திருந்தனர்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் இறந்தது குறைவு என்பதை எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், அது ஓரளவு எதிர்ப்பு சக்தியை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2 ஆண்டுக்குப் பின்பும் சிக்கல்: கரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் 2 ஆண்டு கழித்தும் சிக்கலை சந்தித்துள்ளனர். கரோனா பாதிப்பு நீண்ட காலம் உள்ளது உண்மை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் நீரிழிவு, நுரையீரல் பிரச்சினை, ரத்தம் உறைதல், உடல் சோர்வு, இரைப்பை பாதிப்பு, தசைவலிப்பு போன்ற நீண்டகால கரோனா தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது என அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x