Published : 30 Dec 2017 01:58 PM
Last Updated : 30 Dec 2017 01:58 PM

மும்பை தீ விபத்தில் எரிந்து போன பிறந்தநாள் கொண்டாட்டம்: கருகிய குஷ்பூ பன்சாலி

மும்பை கேத்வாடியை பகுதியில் வசிக்கும் குஷ்பூ பன்சாலிக்கு அன்று 29-வது பிறந்தநாள். தனது பிறந்த நாளை, நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட விரும்பிய குஷ்பூ பன்சாலி, அதற்காக தேர்ந்தெடுத்த இடம் மும்பை லோயர் பேரல்ஸ் பகுதியில், கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள ஓட்டல். இங்கு தான் நேற்று முன்தினம் இரவு கொடூரத் தீ விபத்து நடந்து 14 பேர் உயிரிழந்தனர்.

தனது கணவர் ஜெயேஷ் மற்றும் குடும்ப நண்பர்கள், உறவினர்களுடன் அந்த ஓட்டலின் மொட்டை மாடி உணவகப் பகுதியில், குதூகலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. வழக்கம்போல் கேக் வெட்டி கொண்டாடி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் குஷ்பூ பன்சாலி. அவருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி, மகிழ்ச்சி பொங்க புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அனைவரும் உற்சாகமாக, சாப்பிட்டு முடித்தனர்.

ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பில் தொகையையும் செலுத்திவிட்டு ஒவ்வாருவராக மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினர். பெரும்பாலானவர்கள் கீழே இறங்கி விட்டனர். குஷ்பூ மற்றும் ஒரு சிலர் மட்டுமே கீழே இறங்க வேண்டும். அதற்குள் அந்தக் கட்டிடத்திற்குள் தீப்பிடித்துக் கொண்டது. பெரும்பாலானவர்கள் படிக்கட்டை நோக்கி வேகமாக ஓடினர்.

குஷ்பூ, அவரது இரு தோழிகள் கிஞ்சல் மற்றும் நெஹா ஆகிய மூவரும், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தனர். தீயில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்த ஆண்கள் கழிவறைக்குள் சென்று பதுங்கினர்.

உள்ளே இருந்தபடியே குஷ்பூவின் தோழி கிஞ்சல், தங்களை வந்து காப்பாற்றுமாறு மொபைல் போனில் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால் தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் உதவியாக யாரும் வர முடியாத சூழல் ஏற்பட்டது. கழிவறை பகுதியிலும் தீ பிடிக்கத் தொடங்கியதால் உள்ளே இருந்தும் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

தீக்கு பயந்து கழிவறைக்குள் சென்று பதுங்கியதற்கு பதில் முண்டியடித்து படிக்கட்டு வழியாக கீழே சென்றிருக்கலாமோ என நெஹாவுக்கு தோன்றியது. உடனடியாக, கழிவறைக்கு வெளியே எரியும் சிறிய தீயை தாண்டி காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஓடி விடலாம் என தோழிகள் இருவரையும் நெஹா அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வரத் தயாராக இல்லை.

தீக்கு பயந்து வெளியே வர அஞ்சினர். எனினும் நெஹா மட்டும் தீயை தாண்டி வெளியே ஓடி வந்தார். தீயில் பட்டு காயம் ஏற்பட்டது. எனினும் உயிர் தப்பினார். ஆனால், மற்ற இரு தோழிகளும் இருந்த ஆண்கள் கழிவறை பகுதிக்கு தீ பரவியது. சிக்கிக் கொண்ட இருவரும் உயிருடன் எரிந்தனர்.

 

 

பலத்த தீக்காயமடைந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. காவல்துறை வேனில் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆக்ஸிஜன் வசதி இல்லாததால் குஷ்பூவுக்கு செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்களும் உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடைசியில் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போனது.

சரியான முறையில் ஓட்டலைக் கட்டாத அதன் உரிமையாளரும், இதற்கு அனுமதி அளித்த மும்பை மாநகராட்சி நிர்வாகமுமே இந்த விபத்துக்கு முழு காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குஷ்பூவின்  பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மகிழ்ச்சி ததும்ப கடைசியாக தனது மொபைல் போனில் எடுத்த புகைப்படத்துடன், நெஹா கண்ணீர் மல்க அழுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x