Published : 28 Dec 2017 10:00 AM
Last Updated : 28 Dec 2017 10:00 AM

திருப்பதி பல்கலை.யில் 4ஜி பனை மரம்

திருப்பதியில் உள்ள சமஸ்கிருத வித்யாபீடம் பல்கலைக்கழக வளாகத்தில் நவீன தொழில் நுட்பத்தில் 4ஜி மொபைல் டவர் பனை மரம் போன்ற உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் 4ஜி மொபைல் சேவைக்கு மாறி வருகின்றனர். புதிய மொபைல் தொலைபேசி அனைத்திலும் 4ஜி சேவை உள்ளது. செல்போன் நிறுவனங்கள் ஏற்கனவே அமைத்துள்ள 2ஜி, 3ஜி டவர்களின் சேவையை 4ஜி சேவையாக மாற்றி அமைத்து வருகின்றன. இதில் அடுத்த கட்டமாக, தற்போது பனை மரம் போன்ற வடிவில் டவர்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதியில் உள்ள சமஸ்கிருத வித்யாபீடம் பல்கலைக்கழக வளாகத்தில் விளையாட்டு மைதானத்தின் அருகே, வித்தியாசமான முறையில் ஒரு பனை மரம் காணப்படுகிறது. இதன் அருகே சென்று பார்த்தால், இது ஒரு செல்போன் டவர் என தெரியும். இந்த டவர் 25 மீட்டம் உயரம் கொண்டதாகும். இது மழை, வெய்யில் போன்றவற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் மூலம் 500 மீட்டர் சுற்றளவில் செல்போன்கள் சீராக பணியாற்றும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 1,700 மாணவ, மாணவியருக்கு இலவச வை-ஃபை இணைப்பும் இதன் மூலம் வழங்கப்படுகிறது. இந்த டவர் அமைக்க அதிக இடம் தேவையில்லை, கதிர் வீச்சும் மிகவும் குறைந்த அளவே இருக்கும் என பல்கலை கழக மக்கள் தொடர்பாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x