Published : 28 Aug 2023 07:34 AM
Last Updated : 28 Aug 2023 07:34 AM

சந்திரயான்-3 வெற்றி பெண் சக்தியின் உதாரணம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி பெண் சக்தியின் உதாரணம் என்றுபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைந்து கடந்த 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும், புதிய இந்தியாவின் அடையாளமாகும். எந்தவொரு சவாலான சூழலில் இந்தியாவால் வெற்றிவாகை சூட முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளோம்.

கடந்த சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் உரையாற்றியபோது பெண்களின் தலைமை குறித்துப் பேசினேன். சந்திரயான்- 3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள், பெண் பொறியாளர்கள், பெண் திட்ட இயக்குநர்கள், பெண் மேலாளர்கள் என பல்வேறு நிலைகளில் பெண்கள்திறம்பட பணியாற்றினர். இப்போதுஇந்தியாவின் மகள்கள் விண்வெளிக்கு சவால் விடுகின்றனர். தங்களது லட்சிய பயணத்தில் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். இதன்மூலம் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி, பெண் சக்தியின் உதாரணமாகும்.

இந்த ஆண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை பார்த்து ஜி-20 பிரதிநிதிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

வரும் செப்டம்பரில் இந்தியாவின் திறன் உலகத்துக்கு பறைசாற்றப்பட உள்ளது. அதாவது அடுத்த மாதம் டெல்லியில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினத்தை உற்சாகமாக கொண்டாடினோம். அப்போது வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்றி தேசப் பற்றை பறைசாற்றினோம். அஞ்சல் நிலையங்கள் மூலம் மட்டும் சுமார் 1.5 கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நமது தொழிலாளர்கள், நெசவாளர்கள், பெண்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது சுமார் 5 கோடி பேர், தேசிய கொடியுடன் செல்பி எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த ஆண்டு, இந்தஎண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

'என் மண், என் தேசம்' இயக்கம் தீவிரம் அடைந்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புனித மண்ணை சேகரிக்கும் பிரச்சாரம் தொடங்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் புனித மண் ஆயிரக்கணக்கான அமுதக் கலசங்களில் ஒன்று திரட்டப்படும். அக்டோபர் இறுதியில் ஆயிரக்கணக்கான அமுதக் கலச யாத்திரை, தலைநகர் டெல்லியை வந்தடையும். நாடு முழுவதும் இருந்துகொண்டு வரப்பட்ட புனித மண்ணிலிருந்து டெல்லியில் அமுத பூங்கா உருவாக்கப்படும்.

சம்ஸ்கிருத நாள் வாழ்த்து: மனதின் குரல் நிகழ்ச்சிக்காக இந்த முறை எனக்கு சம்ஸ்கிருத மொழியில் ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்குக் காரணம், ஆகஸ்ட் 31-ம் தேதி உலக சம்ஸ்கிருத தினம் ஆகும். இதற்காக இப்போதே சம்ஸ்கிருத நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உலகின் தொன்மையான மொழிகளில் சம்ஸ்கிருதமும் ஒன்று. இது பல நவீன மொழிகளின் தாய். தொன்மை, அறிவியல், இலக்கணத்துக்காக இன்றளவும் சம்ஸ்கிருதம் போற்றப்படுகிறது.

இந்தியாவின் தொன்மையான அறிவு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சம்ஸ்கிருத மொழியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யோகா, ஆயுர்வேதம், உளவியல் போன்ற துறைகளில் ஆய்வு செய்பவர்கள், இப்போது சம்ஸ்கிருதத்தை கற்றுக் கொள்கிறார்கள். இன்று நாட்டு மக்களிடையே சம்ஸ்கிருதம் குறித்த விழிப்புணர்வும், பெருமித உணர்வும் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தாய் மொழி, நம்மைநமது வேர்களுடன் இணைக்கிறது. தாய்மொழியுடன் நாம் இணையும்போது, நமது கலாச்சாரத்துடன் இணைகிறோம். நமது நற்பண்பு, பாரம்பரியத்துடன் இணைகிறோம்.

தெலுங்கு தின வாழ்த்து: இந்தியாவின் மற்றொரு பெருமைமிக்க தாய்மொழி தெலுங்கு ஆகும். ஆகஸ்ட் 29-ம் தேதி தெலுங்கு தினத்தை கொண்டாட உள்ளோம். இதற்காக இப்போதே தெலுங்கு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு மொழியின் இலக்கியம், பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிடித்தமான விளையாட்டு என்ன? - மாணவரின் கேள்விக்கு பிரதமர் பதில்

மனதின் குரல் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகதி, பிரயங்கா ரேஸ் வாக், அசாமை சேர்ந்த அம்லான், மகாராஷ்டிராவை சேர்ந்த அபிதன்யா ஆகியோர் பிரதமருடன் பேசினர். அப்போது அசாமை சேர்ந்த அம்லான், பிரதமருக்கு பிடித்தமான விளையாட்டு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலில் கூறியதாவது:

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைக்க வேண்டும், பதக்கங்களைக் குவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சார்பில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஹாக்கி, கால்பந்தாட்டம், கபடி, கோகோ ஆகியவை நமது மண்ணோடு இணைந்த விளையாட்டுகள். இதில் நாம் பின்தங்கி இருக்கக் கூடாது. வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் நமது வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவித்து வருகிறோம்.

ஒரு காலத்தில் மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை குடும்பத்தினர் தடுத்து வந்தனர். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. அனைத்து குடும்பங்களிலும் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x