Published : 30 Dec 2017 11:09 AM
Last Updated : 30 Dec 2017 11:09 AM

மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் பேரணியில் பாலஸ்தீன தூதர் பங்கேற்பு: இந்தியா கடும் எதிர்ப்பு

மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் நடத்திய பேரணியில் அவருடன் பாலஸ்தீன தூதர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தரப்பில் பாலஸ்தீனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத்தை, விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அரசியலில் ஈடுபடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நேற்று பிரமாண்ட பேரணியை அவர் நடத்தினார். இதில் அவருடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியும் கலந்து கொண்டார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை எதிர்த்து சமீபத்தில் ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது. இஸ்ரேலுடன் நல்லுறவை பேணி வருகின்றபோதிலும், பாலஸ்தீன விவகாரத்தில் நீண்டகாலமாக கடை பிடித்து வரும் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது.

இந்தநிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பாலஸ்தீன தூதர் பங்கேற்றுள்ளார். இதற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, ரவிஷ் குமார் கூறியதாவது:

‘‘பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் நடத்திய பேரணியில் பாலஸ்தீன தூதர் பங்கேற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரவிக்கப்படும். புதுடெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரிடம் முறைப்படி இந்தியாவின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்வோம். மேலும் பாலஸ்தீன நாட்டின் வெளியுறவு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் பேசுவோம்’’ எனக்கூறினார்.

ஹபீஸ் சயீத்துடன் பாலஸ்தீன தூதர் வாலித் அபு  அலி அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x