Published : 24 Dec 2017 08:49 AM
Last Updated : 24 Dec 2017 08:49 AM

35 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் தம்பதி போலீஸில் சரண்

கடந்த 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தனது மனைவியுடன் தெலங்கானா போலீஸில் சரண் அடைந்தார்.

தெலங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டம், செர்லோபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜினுகு நரசிம்ம ரெட்டி (எ) ஜம்பண்ணா. இவர் பாலிடெக்னிக் படித்து சிறு வயதிலேயே நக்சலைட் அமைப்பில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக உயர்ந்து அந்த அமைப்பின் மத்திய உறுப்பினரானார்.

இவர் ஏற்கெனவே வடக்கு தெலங்கானா பகுதி செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர், ஒரு ராணுவ வீரருக்கு தேவையான அனைத்து பயிற்சி மற்றும் உத்திகளையும் அறிந்திருந்தார்.

இவர் மீது தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவரை உயிருடன் பிடித்து கொடுத்தாலோ அல்லது இவரைப் பற்றி தகவல் தெரிவித்தாலோ ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீஸார் அறிவித்திருந்தனர்.

மனமாற்றம்

ஜம்பண்ணாவின் மனைவி ரஜிதா. வாரங்கல் மாவட்டம், தமரா பகுதியைச் சேர்ந்த இவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.இவர் கடந்த 2003-ம் ஆண்டு நக்சலைட் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜம்பண்ணா, தனது மனைவி ரஜிதா மற்றும் தன்னுடன் பணியாற்றும் மற்றொருவருடன் சரணடைய முடிவு செய்தார்.

இதன்படி வாரங்கல் மாவட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி நிர்வாகி ஒருவரின் உதவியுடன் போலீஸில் சரணடைய விரும்பினார். இதுகுறித்து மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இதற்கு ஒப்புக்கொண்டதால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த 3 பேரும் வாரங்கல் போலீஸில் சரணடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x