Published : 24 Aug 2023 08:14 AM
Last Updated : 24 Aug 2023 08:14 AM

சந்திரயான்-3 திட்டத்தின் மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகள்

பி.என்.ராமகிருஷ்ணா, கே.கல்பனா, எம்.சங்கரன், எம்.வனிதா, சோம்நாத், உன்னிகிருஷ்ணன் நாயர், வி.நாராயணன், வீரமுத்துவேல். (இடமிருந்து வலம்)

புதுடெல்லி: சந்திரயான்-3 திட்டத்தின் மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 செயற்கைக்கோளில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக சுமார் 1,000 இஸ்ரோ விஞ்ஞானிகளும், இன்ஜினீயர்களும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், திட்டத்தின் மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

எஸ்.சோமநாத் (இஸ்ரோ) தலைவர்: இஸ்ரோவின் தலைவராக உள்ள ஸ்ரீதர பனிக்கர் சோமநாத் என்னும் எஸ்.சோமநாத், இஸ்ரோவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயராக பணியைத் தொடங்கியவர். சந்திரயான்-3 விண்கலத்தை ஆர்பிட்டரில் செலுத்துவதற்கான ராக்கெட்டை டிசைன் செய்தவர் இவர்தான்.

இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் எதிர்பார்க்கும் திறமையான தலைவராக அவர் அறியப்படுகிறார். சந்திரயான்-3 செயற்கைக்கோள் ராக்கெட்டில் ஏவப்படுவதற்கு முன்பு முழுமையாக சோதனை செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்தது அவரது பொறுப்பாக அமைந்தது. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் (ஐஐஎஸ்சி) உயர்கல்வி நிறுவனத்தில் படித்தவர் சோமநாத். சோமநாத் என்பதற்கு `சந்திரனின் அதிபதி' என்பது பொருளாகும்.

உன்னிகிருஷ்ணன் நாயர் (இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்): சந்திரயான்-3 திட்டத்தின் மற்றொரு மூளையாக செயல்பட்டவர் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கும் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர். ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சிக்கான விக்ரம் சாராபாய் மையத்தின் இயக்குநராக வெற்றிகரமாக வலம் வருகிறார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் விண்வெளிப் பொறியாளராக உள்ளார் உன்னிகிருஷ்ணன். இவரும், பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்) முன்னாள் மாணவராவார். நாட்டின் மனித விண்வெளி விமான மையத்தின் முதல் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். ககன்யான் திட்டத்திற்கான பல முக்கியமான பணிகள் இவரால் வழிநடத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோளை ஏவும் லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3 திட்டம் இவருடைய தலைமையில் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. சிறுகதைகளையும் இவர் அவ்வப்போது எழுதி வருகிறார்.

பி.வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குநர், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக உள்ள பி. வீரமுத்துவேல், இந்தத் திட்டத்துக்காக கடந்த 4 ஆண்டுகளாக பாடுபட்டு வந்துள்ளார். சென்னையில் எம்.டெக் முடித்த இவர், சந்திரயான்-2 திட்டத்திலும், மங்கள்யான் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். 2019-ல் லேண்டர் விக்ரம் திட்டத்தில் இருந்து தோல்வி கண்ட அவர், தற்போது சந்திரயான்-3 திட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்.

கே.கல்பனா, சந்திரயான்-3 துணை திட்ட இயக்குநர், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு: கோவிட் பெருந்தொற்று காலத்தில் சந்திரயான்-3 திட்டத்தின் துணை இயக்குநராக கடுமையாகப் பணியாற்றினார். சந்திரயான்-2, மங்கள்யான் திட்டங்களிலும் இவர் தனது பங்கை அளித்திருந்தார்.

எம்.வனிதா, பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய துணை இயக்குநர்: சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக எம். வனிதா பணியாற்றிருந்தார். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் இன்ஜினீயரான இவர், சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றியபோது அவர் பெற்ற அனுபவங்கள், தற்போதைய சந்திரயான்-3 திட்டத்தை மெருகேற்ற உதவின.

எம். சங்கரன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர்: இஸ்ரோவின் தூண்களில் ஒருவராகக் கருதப்படும் எம். சங்கரன், செயற்கைக்கோள்களுக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் சிஸ்டம்களை தயாரிப்பதில் நிபுணராக உள்ளார். செயற்கைக்கோள் தயாரிப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள அவர் சந்திரயான்-1, மங்கள்யான், சந்திரயான்-2 திட்டங்களில் பணியாற்றியதோடு வெற்றி பெற்றுள்ள சந்திரயான்-3 திட்டத்திலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சந்திரயான்-3 செயற்கைக்கோள் போதுமான அளவு வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்வது அவரது வேலையாக இருந்தது. மேலும் நிலவில் தரையிறங்கிய லேண்டரின் வலிமையை சோதிக்க சந்திரனின் மேற்பரப்பு மாதிரியை உருவாக்கியதில் பெரும்பங்காற்றினார். இவர் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

வி.நாராயணன், திருவனந்தபுரம் லிக்விட் புரொபல்ஷன் சிஸ்டம்ஸ் மைய இயக்குநர்: லிக்விட் புரொபல்ஷன் இன்ஜின்கள் துறையில் இவர் நிபுணராக அறியப்படுகிறார். விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கான பணிகளை இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது. காரக்பூர் ஐஐடி முன்னாள் மாணவரான இவர் கிரையோஜெனிக் இன்ஜின்களில் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட்களில் இவரது பங்கு அளப்பரியது. சந்திரயான்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய லாஞ்ச் வெஹிகிள் மார்க்-3 ராக்கெட்டை உருவாக்க பெரும்பங்காற்றினார்.

பி.என்.ராமகிருஷ்ணா, பெங்களூரு இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் அன்ட் கமாண்ட் நெட்வொர்க் (ஐஎஸ்டிஆர்ஏசி) இயக்குநர்: சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு இந்த ஐஎஸ்டிஆர்ஏசி மையம் அனுப்பிய உத்தரவுகளும், சிக்னல்களுமே காரணம். இந்த மையத்தை இஸ்டிராக் என்றும் அழைப்பதுண்டு. சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்கு பி.என்.ராமகிருஷ்ணாவுக்கு உண்டு. பெங்களூரு புறநகர் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமஆன மையத்தில், 32 மீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய டிஷ் ஆண்டெனா (இந்தியாவிலேயே மிகப்பெரியது) மூலம் இந்த உத்தரவுகள் சந்திரயான்-3-யில் உள்ள விக்ரம் லேண்டருக்கு அனுப்பப்பட்டன. விக்ரம் லேண்டர் தரையில் இறங்கும் கடைசி 20 நிமிடங்களும் பெங்களூருவில் உள்ள இஸ்டிராக் மையத்தில் இருந்து பிறப்பித்த உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x