Published : 22 Dec 2017 03:04 PM
Last Updated : 22 Dec 2017 03:04 PM

ஆதர்ஷ் வழக்கில் அசோக் சவானிடம் விசாரணை: ஆளுநர் உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை

ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டு வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானை விசாரிக்க அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கியதற்கு தடை விதித்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் பதவி வகித்த காலத்தில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக மும்பையின் கொலாபா பகுதியில் ஆதர்ஷ் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால், இதில் சில குடியிருப்புகளை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கி மிகப் பெரிய அளவில் ஊழல் புரிந்ததாக அசோக் சவான் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும் அசோக் சவான் மீது சிபிஐ வழக்கு தொடர்வதற்கு அப்போதைய ஆளுநர் சங்கரநாராயணன் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ நிறுத்தியது.

பின்னர் அம்மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஆதர்ஷ் ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்டதில் அசோக் சவானுக்கு எதிராக புதிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக சிபிஐ தெரிவித்தது. எம்பியான அவர் மீது வழக்கு தொடர ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுமதி வழங்கினார்.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அசோக் சவான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (வெள்ளி) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் சாதானா ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள சிபிஐ அதற்குரிய சான்றுகளை சமர்பிக்க தவறிவிட்டது, எனவே அசோக் சவானிடம் விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x