Published : 05 Dec 2017 10:51 AM
Last Updated : 05 Dec 2017 10:51 AM

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே சமமான போட்டி: கருத்துக் கணிப்பில் தகவல்

 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் சம பலத்துடன் இருப்பதாகவும், ஆட்சியைப் பிடிப்பதில் இருகட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.

குஜராத்தில் 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த பாஜக இதுவரை இல்லாத அளவு எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் - ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு நேற்று (திங்கள்) வெளியாகியுள்ளது. நவம்பர் 23 முதல் நவம்பர் 30 வரை, மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் பரவலாக 200 இடங்களில் 3,655 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி 59 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக குறையும். அதேசமயம் 29 சதவீதமாக உள்ள காங்கிரஸின் வாக்குவங்கி 43 சதவீதமாக அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்து வந்த ஆதரவு குறைந்துள்ளது.

வாக்காளர்களைப் பொறுத்தவரையில் வர்த்தகர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. அவர்களிடையே காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதேபோன்று பெண்களிடையேயும் பாஜகவின் வாக்குவங்கி சரிந்துள்ளது. பெண்களிடையே 59 சதவீத அளவிற்கு பாஜவிற்கு ஆதரவு இருந்த நிலையில் அது தற்போது 44 சதவீதமாக மாறியுள்ளது. அதேசமயம் காங்கிரஸூக்கு பெண்களிடையே ஆதரவு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 91 முதல் 99 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், காங்கிரஸ் 78ல் இருந்து 86 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனம் ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 151 இடங்களும், காங்கிரஸுக்கு 32 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், அக்டோபர் மாதம் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவிற்கு 121 இடங்களும், காங்கிரஸுக்கு 64 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x