Published : 15 Aug 2023 06:38 PM
Last Updated : 15 Aug 2023 06:38 PM

ஜம்மு காஷ்மீரில் நடந்த சுதந்திர தின விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டுப்பாடுகளை நீக்கிய நிர்வாகம்

ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் 77-வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் நடமாடிய பொதுமக்கள்

ஸ்ரீநகர்: இரண்டு பத்தாண்டுகளுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரின் பக்‌ஷி மைதானத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கனக்கான மக்கள் கூடினர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் இந்தாண்டு நீக்கியிருந்தனர்.

கடந்த ஆண்டுகளில் சுதந்திர தினம், குடியரசு தினங்களின் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சாலைகளை மறித்தபடி இரும்புக் கம்பி தடுப்புகள் இல்லாதது ஸ்ரீநகரில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி அனைத்து வயது ஆண்களும் பெண்களும் பக்க்ஷி மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க அளவு குழந்தைகளும் அடங்குவர். கடந்த இருபது ஆண்டுகளில் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக அதிக அளவில் மக்கள் கூடியது இதுவே முதல் முறை. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டில் சுமார் 20,000 மக்கள் கூடி அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.

மைதானத்தில் இருந்தவர்கள் அங்கு தங்களுக்குள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் அங்கு ஒரு திருவிழா சூழல் நிலவியது. சுதந்திர தினக் கொடியேற்றத்துக்காக நகரின் பல்வேறு பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்பட்டன. நகரில் லால் சவுக் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீராக இயங்கியது. ஜம்மு காஷ்மீரில் முக்கிய கொண்டாட்டம் நடந்த பக்க்ஷி மைதானத்தைச் சுற்றியிருந்த சில பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுப்ட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினங்களின் போது தடைசெய்யப்படும் அலைப்பேசி மற்றும் இணைய சேவை மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தடைசெய்யப்படவில்லை.

சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில் திரண்டனர். எவ்வளவு பேர் திரண்டனர் என்ற எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொண்டாட்டம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அபித் ஹுசைன் என்பவர் கூறுகையில், " எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், எந்த விதமான சிறப்பு அனுமதியும் இல்லாமல் மக்கள் அனுமதிக்கப்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. முன்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சுதந்திர தின அணிவகுப்பைக்கான கந்தர்பால் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த ஷாயிஸ்தா பனோ கூறுகையில்,"சுதந்திர தின அணிவகுப்பைக்காண பல ஆண்டுகளாக காத்திருந்தேன். இந்தாண்டு அனைவரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இதுதான் சரியான சமயம் என்று நான் முடிவெடுத்து வந்தேன் என்றார்.

முன்னதாக, இந்த சுதந்திர தினக்கொண்டாட்டத்தில் பெருமளவில் மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும் அவர்கள் சரியான அடையாளச்சான்றுகளை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பக்ஷி மைதானத்தில் சுதந்திர தினக்கொண்டாட்டம் நடந்ததால், அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். கடந்த 2018ம் ஆண்டு மேம்படுத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக இந்த மைதானம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தினக்கொண்டாட்ட பேரணி, சோனாவரில் உள்ள ஷேர்- இ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டு சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அப்போதைய முதல்வர் முஃப்தி முகம்மது சயீத், கூட்டத்தைச் சேர்ப்பதற்காக பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பு படையினர் உதவியுடன் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x