Published : 18 Nov 2017 09:08 PM
Last Updated : 18 Nov 2017 09:08 PM

விசாரணை என்ற பெயரில் சிறுவனைச் சித்ரவதை: உ.பி.போலீஸ் ‘அராஜகம்’ குறித்த வீடியோவால் பரபரப்பு

கிழக்கு உத்தரப் பிரதேச மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவனை போலீஸார் இருவர் கடும் சித்ரவதை செய்து அடித்து உதைத்த காணொளி காட்சியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் திருடியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இந்தச் சிறுவனை போலீஸார் இருவர் போலீஸ் நிலைய வளாகத்தில் தாறுமாறாக அடித்து உதைத்தக் காட்சி வீடியோவாக வெளிவர தற்போது இந்த 2 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனின் கால்களில் மரக்கட்டை ஒன்றை வைத்து அதன் இருமுனைகளிலும் இரண்டு போலீஸ் காரர்களும் ஏறி நின்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறும் சிறுவனை சிறிதும் இரக்கமின்றை லத்தியால் அடித்து உதைத்துள்ளனர். சித்ரவதையுடன் சிறுவனை கன்னாபின்னாவென்று வார்த்தை வசைகளுடன் பிரம்படி கொடுத்துள்ளனர் போலீஸார்.

ஆனால் இந்த வீடியோவை படம்பிடித்தது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வீடியோ காட்சியினால் கொந்தளிப்பு ஏற்பட இரண்டு போலீஸ்காரர்களையும் மஹாராஜ்கஞ்ச் போலீஸ் உயரதிகாரி சஸ்பெண்ட் செய்ய நேரிட்டுள்ளது.

இது குறித்து உயரதிகாரி அஷுடோஷ் சுக்லா கூறும்போது, “திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்ட பொருட்களை மீட்க அந்தப் பையனை அடித்து உதைத்துள்ளனர். ஆனால் அவனிடம் எந்த பொருளும் இல்லை. அதனால் அந்தப் பையன் விடுவிக்கப்பட்டான். சம்பந்தப்பட்ட போலிஸையும், சப் இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம். விரிவான விசாரணைக்குப் பிறகு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x