Published : 19 Nov 2017 08:17 AM
Last Updated : 19 Nov 2017 08:17 AM

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: விமானப் படை கமாண்டோ வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீரில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விமானப் படையின் கமாண்டோ வீரர் வீரமரணமடைந்தார்.

ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான ஜக்குரா ஹஸ்ரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் காரில் சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் பலியானார். தீவிரவாதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

பிடிபட்ட தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் உளவுத் துறை அளித்த தகவல்களின்படி வடக்கு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டம், சாந்தர்கீர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. ஸ்ரீநகரில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று சுற்றி வளைத்தனர்.

ராணுவ வீரர்கள், விமானப் படையின் கருடா பிரிவு கமாண்டோக்கள், சிஆர்பிஎப் போலீஸார், உள்ளூர் போலீஸார் அடங்கிய குழு அந்தப் பகுதியை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தது. அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதற்கு பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது. இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியின் நெருங்கிய உறவினர் ஓவைத்தும் இந்தச் சண்டையில் பலியானார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்த சண்டையில் விமானப் படையின் கருடா பிரிவைச் சேர்ந்த கமாண்டோ வீரர் நீரலா வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இரு அமைப்புகளின் முக்கிய தலைவர்களை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் சப்ஹர் பட், உமர் காலித், அப்துல் குயாம் நஜார், யாசீன் ஆகிய முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள்

பண்டிப்போரா மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஸ்ரீநகரில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் மட்டும் நடைபெற்றன.

ஸ்ரீநகர் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 8 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. ஸ்ரீநகர், பண்டிப்போரா பகுதிகளில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

275 தீவிரவாதிகள் பதுங்கல்

காஷ்மீரில் 275 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். இந்த ஆண்டில் 291 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 80 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 183 பேர் உயிரிழந்துள்ளனர். பொது மக்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். கடந்த அக்டோபர் வரை 168 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x