Published : 24 Nov 2017 09:43 AM
Last Updated : 24 Nov 2017 09:43 AM

கேரள மாநிலத்தில் உள்ள அகாடமியில் பயிற்சி நிறைவு: கடற்படையில் முதல் பெண் பைலட் நியமனம்

இந்திய கடற்படையில் முதல் முறையாக பெண் பைலட் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 3 பெண்கள் வெவ்வேறு பிரிவில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘எழிமலா கடற்படை அகாடமி’யில் பயிற்சி பெற்றவர்களின் நிறைவு விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. இதில் கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அகாடமியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப், டெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவைச் சேர்ந்த எஸ்.சக்திமாயா ஆகிய 4 பெண்களும் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இவர்களில் சுபாங்கி ஸ்வரூப் கடற்படையின் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடற்படையில் கமாண்டராகப் பணியாற்றி வரும் வீரரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்படை வரலாற்றில் பெண் பைலட் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவர் விரைவில் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானத்தில் பறக்க உள்ளார். மற்ற 3 இளம்பெண்களும் கடற்படையின் ஆயுதங்கள் பிரிவு (என்ஏஐ) அதிகாரிகளாக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து கடற்படை தெற்கு மண்டல செய்தித் தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியர் கூறும்போது, ‘‘இந்தியக் கடற்படையின் விமானப் படை பிரிவில் ஏற்கெனவே வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், கடற்படை பைலட் பணிக்கு பெண்ணை நியமித்தது இதுவே முதல் முறை. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 4 பேரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் முழு அளவில் பயிற்சி பெறுவார்கள். ராணுவம், கடற்படை, விமானப் படை பைலட்டுகளுக்கு ஐதராபாத்தில் உள்ள விமானப் படை அகாடமி யில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, அங்கு சுபாங்கி பயிற்சி பெறுவார்’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x