Published : 16 Nov 2017 12:56 PM
Last Updated : 16 Nov 2017 12:56 PM

கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் மோதல்; தாமஸ் சாண்டி விவகாரம் எதிரொலி

கேரளாவில் முன்னாள் அமைச்சர் தாமஸ் சாண்டி விவகாரத்தால் ஆளும் இடதுசாரி கூட்டணியில் கடும் மோதல் எழுந்துள்ளது.

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனது சொகுதியான ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் நெல் விளையும் விவசாய நிலையத்தை ஆக்கிரமித்து ஆடம்பர விடுதி கட்டியதாக இவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்தார். இதை ரத்து செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் சாண்டி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தாமஸ் சாண்டியை கண்டித்தது. இந்த விவகாரத்தை அடுத்து அவர் பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதை தொடர்ந்து தாமஸ் சாண்டி அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று பதவி விலகினார்.

இந்நிலையதில், தாமஸ் சாண்டி விவகாரம் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமஸ் சாண்டி விவகாரத்தை கையில் எடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது. இடதுசாரி கூட்டணி கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கேரள மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், தாமஸ் சாண்டியை நேரடியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தாமஸ் சாண்டி பங்கேற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அக்கட்சியை சேர்ந்த நான்கு அமைச்சர்களும் புதன் கிழமை அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் பெரும் சலசலப்பு எழுந்தது.

இதையடுத்து, பினராயி விஜயன் ‘‘எந்த பிரச்னையானாலும் பேசி தீர்க்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தை யாரும் புறக்கணிப்பதை ஏற்க முடியாது’’ எனக் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ளது.

தாமஸ் சாண்டி ராஜினாமா செய்ததன் மூலம் இடதுசாரி கூட்டணியில் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x