Published : 11 Aug 2023 05:40 AM
Last Updated : 11 Aug 2023 05:40 AM

காங்கிரஸை தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக மக்கள்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு ரகசிய சக்தி இருக்கிறது. அந்த கட்சிகள் சபித்தால், ஆசீர்வாதமாக மாறிவிடுகிறது. இதற்கு 3 உதாரணங்களை கூறுகிறேன்.

முதலாவது வங்கித் துறை சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதற்கு நேர்மாறாக பொதுத்துறை வங்கிகளின் லாபம் இருமடங்காக அதிகரித்துள்ளது. செயல்படாத சொத்துகள் (என்பிஏ) மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இப்போது செயல்படாத சொத்துகள் மூலமும் வருவாய் ஈட்டப்படுகிறது.

இரண்டாவதாக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் குறித்து எதிர்மறை தகவல்களை காங்கிரஸ் பரப்பி வந்தது. ஆனால் அந்த நிறுவனம் தற்போது அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

மூன்றாவதாக எல்ஐசி குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வதந்திகளை பரப்பின. எல்ஐசி நிறுவனம் மூழ்கிவிட்டதாக குற்றம் சாட்டின. ஆனால் தற்போது எல்ஐசி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் கோலோச்சி வருகிறது. ஒரு காலத்தில் எல்ஐசி-ஐ விமர்சித்தவர்கள்கூட இப்போது பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகளில் அதிக தொகையை முதலீடு செய்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆணவப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக உண்மை நிலையை அந்த கட்சியால் உணர முடியவில்லை. காங்கிரஸ் மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், குஜராத், பிஹார், திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 1962-ம் ஆண்டில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகு அந்த கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. தமிழக மக்கள் காங்கிரஸை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

டெல்லியில் ஒருவர் கூட இல்லை: கடந்த 1972-ம் ஆண்டுக்கு பிறகு மேற்குவங்கத்திலும், 1985-ம் ஆண்டுக்கு பிறகு உத்தரபிரதேசம், குஜராத், பிஹாரிலும் காங்கிரஸை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். டெல்லி, ஆந்திரா,மேற்குவங்கத்தில் காங்கிரஸுக்கு இப்போது ஓர் எம்எல்ஏ கூட இல்லை. அந்த கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

காங்கிரஸின் சின்னம் முதல் கொள்கைகள் வரை அனைத்தும் வெளிநபர்களிடம் இருந்து பெறப்பட்டவை. அந்த கட்சியைதொடங்கியதுகூட வெளிநாட்டுகாரர்தான். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் பெயர்களில் மட்டும்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் எந்த திட்டமும் முழுமையாக அமல் செய்யப்படவில்லை. இதன்காரணமாகவே கடந்த 2014-ம்ஆண்டு முதல் காங்கிரஸை மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி மன்னராட்சி முறையில் செயல்படுகிறது. இதன்காரணமாக அம்பேத்கர், ஜெகஜீவன் ராம் உள்ளிட்டோரை அந்தகட்சி புறந்தள்ளியது. சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் புகைப்படத்தைக்கூட நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் அரசு நிறுவவில்லை. கடந்த 1978-ம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தபோதுதான் நேதாஜியின் புகைப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நிறுவப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி, சரண் சிங் ஆகியோரின் புகைப்படங்களும் காங்கிரஸ் அல்லாத ஆட்சிக் காலத்தில்தான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டன.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஊழல், நிர்வாக சீர்கேடு, ஸ்திரத்தன்மை, வாரிசு அரசியல், வேலைவாய்ப்பின்மை, வன்முறை, தீவிரவாதம் ஆகியவை தலைதூக்கி இருந்தன.

அசாம் மக்களை கைவிட்ட நேரு: கடந்த 1962-ம் ஆண்டில் அசாம் மீது சீன ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. அப்போதைய பிரதமர் நேரு, அசாம் மக்களை கைவிட்டுவிட்டார். இதை அசாம் மக்கள் மறக்கவில்லை. மத்தியில் எனது தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு மத்திய அமைச்சர்கள் சுமார் 400 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர். நான் மட்டும் 50-க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டன. பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கின் அமைதி, வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அகங்காரம் கொண்ட கூட்டணி. சூழ்நிலையின் காரணமாக எதிர்க்கட்சிகள் கைகோத்து உள்ளன. சூழ்நிலை மாறினால் ஒருவருக்கு ஒருவர் கத்தி சண்டை போடத் தொடங்கி விடுவார்கள்.

எதிர்க்கட்சி கூட்டணிகள் தங்களது பெயரை மாற்றி உள்ளன. ஆனால் அந்த கட்சிகளின் தலைவர்கள் செய்த தவறுகள் அவர்களை பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது.

வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த நேரத்தில் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். நாட்டுக்கு துரோகம் இழைக்க வேண்டாம். 140 கோடி மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அவதூறுகளை இன்முகத்துடன் எதிர்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

2.12 மணி நேர உரை: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி 2.12 மணி நேரம் தொடர்ச்சியாக உரையாற்றினார். அவர் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும் ஒரு மணி நேரம் 52 நிமிடங்களுக்குப் பிறகு மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விரிவாக பேசினார். அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x