Published : 10 Aug 2023 04:18 PM
Last Updated : 10 Aug 2023 04:18 PM

தேர்தல் ஆணைய நியமனங்களுக்கான புதிய மசோதா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘தவிர்ப்பு’க்கு காங். எதிர்ப்பு

மாநிலங்களவை

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறை தொடரும் என்றும் ஒருமனதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு ஏற்ப மத்திய அரசு மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. அந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஏற்ப பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக மாற்றும் அப்பட்டமான முயற்சி இது. பாரபட்சமற்ற குழு தேவை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இனி என்னாகும்? ஒரு சார்புடைய தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ஏன் நினைக்கிறார்? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற மசோதா. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் இதை நாங்கள் எதிர்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த மசோதாவைக் கொண்டு வந்து தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மோடியும் அமித் ஷாவும் இப்போது செய்வது போல் தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை எதிர்க்க வேண்டும். பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவையும் இதை எதிர்க்க வேண்டும். அவை செய்யுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். அதையடுத்து, தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், புதிய தேர்வுக் குழுவே புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x